சென்னை அயனாவரம் பணிமனை நிலையத்தை ஆய்வு செய்த தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், 'சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் இருக்கும் அனைத்துப் பேருந்துகளும் இயக்கப்பட வேண்டும். நீண்ட நாட்கள் விடுப்பில் இருக்கும் பணியாளர்களை நேரடியாக சந்தித்து கவுன்சிலிங் வழங்கிப் பணியில் சேர வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஏற்கெனவே கே.கே. நகர் பணிமனையில் ஆய்வுமேற்கொண்டதுபோல இன்று(மே 27) அயனாவரம் பணிமனையில் ஆய்வு மேற்கொண்டுள்ளோம். அனைத்துப்பேருந்துகளும் இயக்க, பணியாளர்கள் முழுமையாகப் பணிக்கு திரும்ப வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம்.
பணியாளர் தங்கும் அறையினையும் பார்வையிட்டு, அதனை சரி செய்ய அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பெண்களுக்கான இலவசப்பயணத்திட்டமும், அனைத்துப் பேருந்துகள் முழுமையாக செயல்படவும் தொடர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.
பள்ளி, கல்லூரிகள் விரைவில் திறக்கப்பட இருக்கும் நிலையில் மாணவர்களுக்கான பஸ் பாஸ் வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. கரோனா பேரிடர் காலத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கி இருக்கிறோம். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்குக் கொண்டு சென்று விரைவில் மாணவர்களுக்கு பஸ் பாஸ் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்’ என்றார்.
இதையும் படிங்க:பஸ் எப்போ வரும்? - சென்னையில் வழிகாட்டும் புதிய செயலி..!