தமிழ்நாட்டில் உள்ள 8 போக்குவரத்துக் கழகங்களில் சுமார் 1.25 லட்சம் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கான 14ஆவது ஊதிய ஒப்பந்தம் 1.9.2019 முதல் அமலாகி இருக்க வேண்டும். இதற்கான 7ஆவது கட்ட பேச்சுவார்த்தை குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்துக் கழகப் பயிற்சி மையத்தில் நடைபெற்றது. போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்திலிருந்து சிஐடியு, அண்ணா தொழிற்சங்கம், ஏஐடியுசி, டிடிஎஸ்எப் வெளிநடப்பு செய்தது.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சிஐடியு அ.சவுந்தரராஜன் கூறுகையில், “பேச்சுவார்த்தையில் உள்ள ஒவ்வொரு அம்சத்திலும் சிஐடியுவின் உழைப்பு, பங்களிப்பு உள்ளது. 90 விழுக்காடு ஒப்பந்தத்தில் உடன்பட்டுள்ளோம். ஒப்பந்தக் காலத்தை 3 ஆண்டிலிருந்து 4 ஆண்டுகளாக உயர்த்தவும், கடந்த ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற 21 வேலை நிறுத்த நாட்களை பணி நாளாக மாற்றி ஊதியம் வழங்க மறுத்ததை கண்டித்தும் பேச்சுவார்த்தையிலிருந்து வெளிநடப்பு செய்தோம். ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை.
இதனைக்கண்டித்து நாளை தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும். அதே போல இந்த ஒப்பந்தத்தில் அண்ணா தொழிற்சங்கப் பேரவை, ஏஐடியுசி, பணியாளர் சம்மேளனம் உள்ளிட்டு 20-க்கும் மேற்பட்ட சங்கங்கள் கையெழுத்திடவில்லை” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து அண்ணா தொழிற்சங்க பொதுச் செயலாளர் கமலக்கண்ணன் கூறுகையில், “14ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையில் அண்ணா தொழிற்சங்கம் சார்பில் வைக்கப்பட்ட எந்த கோரிக்கையும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அதிமுக ஆட்சிக்காலத்தில் 25% ஊதிய உயர்வு கேட்ட கூட்டமைப்புகள் தற்போது திமுக ஆட்சியில் அதே கூட்டமைப்பினர் 8 விழுக்காடு சம்பள உயர்வை மட்டும் கேட்டுள்ளனர்.
போக்குவரத்துத்துறை அமைச்சர் பே பேட்ரிக் முறையில் 5% ஊதியம் என அறிவித்துள்ளார். மூன்று ஆண்டுகள் ஒரு முறை ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடைபெறும். அதை தற்போது நான்கு ஆண்டுகளாக நீட்டிப்பு செய்துள்ளார். மின்சாரத்துறையில் செய்யப்படும் ஊதிய ஒப்பந்த அடிப்படையில் இதை நீட்டிப்பு செய்ததாக தெரிவித்துள்ளனர்.
ஆனால் மின்சாரத் துறையில் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்கும் சம்பளம் உயர்வு போக்குவரத்து துறையில் வழங்குவதை விட அதிகம். அதே போல் தற்போது போக்குவரத்து துறைக்கும் வழங்க வேண்டும். அங்கு இருப்பது போல் போக்குவரத்து துறைக்கும் சலுகைகள் கொண்டுவர வேண்டும் என கேட்டோம். ஆனால் அரசு அதற்குப் பதில் அறிவிக்கவில்லை.
ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய அகவிலைப்படி உயர்வை உயர்த்தி உடனடியாக கொடுக்க வேண்டும். சிறு சிறு உயர்வை மட்டும் உயர்த்திவிட்டு 100% வெற்றியென அறிவித்துள்ளனர். இந்த ஒப்பந்தத்தில் அண்ணா தொழிற்சங்கங்கள் உட்பட சில சங்கங்கள் கையெழுத்து இடவில்லை. அனைவரும் கலந்து ஆலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்போம்” என்றார்.
பேச்சுவார்த்தை நிறைவுக்கு பின்னர் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களைச் சந்திதார். அப்போது பேசுகையில், “7 கட்டமாக நடந்த பேச்சுவார்த்தை இன்று நிறைவு பெற்றுள்ளது. மேலும் பேச்சுவார்த்தை ஏற்பட்டுள்ள ஒப்பந்தத்தின்படி மகளிர் இலவசப்பேருந்து பேட்டா வழங்கப்படும். கீழ்கண்டவாறு ஊதிய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி பே பேட்ரிக் முறையில் 5 சதவீத உயர்வு வழங்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு படிகள் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளன.
பணியின்போது உயிரிழந்த தொழிலாளர்களுக்கு குடும்ப நல நிதி 3 லட்சத்தில் இருந்து 5 லட்சமாக உயர்த்தப்படுகிறது. 1.9.2022 முதல் அமலுக்கு வருகிறது. மேலும் ஓய்வூதிய தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு இலவசப் பயண சலுகை வழங்கப்படும்.
கரோனா காலத்தில் பணியாற்றி அனைத்துப் பணியாளர்களுக்கு சிறப்பு நிதியாக பணி ஒன்றிற்கு ரூ.300 வழங்கப்படும். கடந்த ஆட்சியில் வேலை நிறுத்தத்தில் பங்கேற்று 21 நாள்கள் பணிக்கு வராமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட காலத்தை பணி காலமாக எடுத்துகொள்ளப்படும்.
அதிமுக ஆட்சியில் ஒப்பந்தம் 3 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த நிலையில் தற்போது வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. 34 மேற்பட்ட சங்கங்கள் இந்த ஒப்பந்தத்திற்கு ஆதரவு தெரிவித்து கையெழுத்திட்டுள்ளது’ என்றார்.
போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தம் 4 ஆண்டாக உயர்த்தப்பட்டது குறித்த கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், “இன்றைய நிகழ்கால நிதி நிலையில் உள்ளிட்ட பல்வேறு கருத்துகளை ஆராய்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் போக்குவரத்து மட்டுமின்றி பல்வேறு துறைகளுக்கு முடிவு எடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
தொமுச பொதுச்செயலாளர் சண்முகம் கூறுகையில், “பெரும்பான்மையான தொழிற்சங்கங்கள் கையெழுத்திட்டுள்ளன. இதில் சிஐடியு, ஏஐடியுசி 4 ஆண்டு ஒப்பந்தத்தை ஏற்க மறுத்து 3 ஆண்டு நிலையே தொடர வேண்டும் என கேட்டனர். அவர்களுடையது கோரிக்கையாக உள்ளது. தொமுச சார்பில் முதலமைச்சரை சந்தித்து அகவிலைப்படி உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தினோம். அவர் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக கூறினார். மேலும் ஆட்சியும் திமுக ஆட்சி என்பதால் தொமுச ஆகிய நாங்கள் ஆட்சிக்கு இணக்கமாக ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டோம்’ என்றார்.
இதையும் படிங்க: அரசு விழாக்களுக்கு பள்ளி வாகனங்களைப்பயன்படுத்துவதா... திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்