சென்னை: வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் 88 ஏக்கர் பரப்பளவில் ரூ.393 கோடி மதிப்பீட்டில் அமைய உள்ள புதிய பேருந்து நிலையத்தை இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, தா.மோ. அன்பரசன் ஆகியோர் இன்று (டிச.15) ஆய்வு செய்தனர். பின்னர் அதன் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.
இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் சேகர்பாபு கூறுகையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் செய்யப்பட்டுள்ள பயணிகளுக்கான தேவை மற்றும் வசதிகள் குறித்து ஆய்வு நடைபெற்றது. புயல், மழை போன்ற காரணங்களால் பணிகள் தாமதமாகியுள்ளது. ஏற்கனவே தெரிவித்தபடி பொங்கலுக்குள் பணிகளை முடிப்பது சந்தேகம்தான் என்றார்.
அதோடு பேருந்து நிலையத்தில் சில புதிய ஏற்பாடுகளும் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதையும் சேர்த்து வெகு விரைவில் பணிகள் முடிக்கப்படும் என கூறினார்.
மேலும், கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் அமைப்பதற்கான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், கிளாம்பாக்கம் ரயில் நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: குட்கா முறைகேடு: கூடுதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய சிபிஐக்கு கால அவகாசம்