சென்னை: அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி, சட்டவிரோதக் காவலில் இருப்பதாக அவரின் மனைவி மேகலா தொடர்ந்த வழக்கு மூன்றாவது நீதிபதி சி.விகார்த்திகேயன் முன்பு இன்று (ஜூலை 12) இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது.
அமலாக்கத்துறை தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதங்களைத் தொடங்கினார். அதில் அவர், 'சொத்துகளை முடக்கவும், சோதனை செய்யவும் அமலாக்கத் துறைக்கு அதிகாரம் உள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்றம் குறித்து விசாரணை செய்வதற்காகவே அமலாக்கத்துறை கொண்டு வரப்பட்டது.
செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்கவில்லை என்றாலும் புலன் விசாரணை செய்வதற்கு அமலாக்கத் துறைக்கு அதிகாரம் உள்ளது. பணம் கொடுத்து ஏமாந்ததாகவும், பணப்பரிமாற்றம் நடந்ததாகவும் பலர் புகார் கொடுத்ததன் அடிப்படையிலேயே அமலாக்கத் துறை விசாரணை நடைபெற்றுள்ளது.
ஆயிரக்கணக்கான மக்கள் பணத்தை இழந்து தவிக்கிறார்கள். எங்கள் கடமையை செய்ய விசாரணைக்கு அழைத்தால் செந்தில் பாலாஜி வர மறுக்கிறார். சம்மன் அனுப்பினாலும் வர மறுக்கிறார். அதனால் தான் கைது செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. கைது செய்ய எங்களுக்கு அதிகாரம் இருக்கிறதா? இல்லையா? என வாதிட விரும்பவில்லை. ஆனால் புலன் விசாரணை செய்ய எங்களுக்கு சட்டபடி முழு அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது.
ஆவணங்களின் அடைப்படையிலேயே செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு உள்ளார். கைது செய்த பிறகும் காவலில் எடுத்து விசாரிக்க எங்களுக்கு அதிகாரம் உள்ளது. வங்கி மோசடி வழக்குகளில் 10 ஆயிரம் முதல் 19 ஆயிரம் கோடி ரூபாய் பணங்களை, சொத்துகளை முடக்கி வங்கிகளுக்கு கொடுத்து உள்ளோம்.
கைது செய்ய எங்களுக்கு உரிமை உள்ளது. அதேபோல் அவரிடம் கூடுதல் ஆதாரங்களை வாங்க எங்களுக்கு சட்டப்படி உரிமை உண்டு. அவரை நாங்கள் விசாரிக்க முடியாது என்றால் அது எங்கள் விசாரணை ஆணையத்தின் அடிப்படையையே கேள்விக்கு உள்ளாக்குகிறது. ஒருவர் தவறு செய்ததாக தோன்றினால் அமலாக்கத்துறையால் மட்டுமே விசாரிக்க முடியும்.
பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தை விசாரிக்க உள்ளூர் காவல்துறைக்கு அதிகாரம் இல்லை. ஊழல் தொடர்பாக சம்பாதித்த பணத்தை விசாரிக்க அமலாக்க துறைக்கு அதிகாரம் உள்ளது. எல்லா சிறப்பு சட்டத்துக்கும் சி.ஆர்.பி.சி குற்ற விசாரணை நடைமுறை சட்டம் 167 பிரிவு பொருந்தும்.
தவறாக கைது நடவடிக்கை எடுத்தால் அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்க சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது. அதனால் தான் கைது எண்ணிக்கை குறைவாக உள்ளது. எந்த அழுத்ததுக்கும் அமலாக்க துறை உட்படுவதில்லை.
கைது நடவடிக்கை சரியானது தானா என்பதை அறிந்து கொள்ள சம்பந்தப்பட்ட நபரை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளது. சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டத்தில் 2005ல் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தில் புலன் விசாரணை செய்ய அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. என சொலிசிட்டர் ஜெனரல் அமலாக்கத் துறை தரப்பில் வாதங்களை தெரிவித்து வருகிறார்.