சென்னை: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம், தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம் ஆகியவற்றின் மின் நுகர்வோர் சேவை மையத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அதன்படி, மின் துறை சார்ந்த குறைகளை, 94987 94987 என்ற எண்ணில் பொதுமக்கள் பதிவு செய்யலாம்.
மின் நுகர்வோர் சேவை மையம்
இது தொடர்பாக பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, "தமிழ்நாட்டில் மின்தடை குறித்தும், மின்சாரப் பழுதுகள் குறித்து பொதுமக்கள் எளிதில் புகார்களை தெரிவிக்கும் வகையில் இந்த சேவை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்தக் கட்டுப்பாட்டு மையத்தில் 24 மணி நேரமும் பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். மின் நுகர்வோரின் புகார்கள் குறித்து பதிவு செய்யப்பட்டு புகார் எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்படும்.
விரைவு நடவடிக்கை
மின் நுகர்வோருடைய புகார்களை விரைந்து தீர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஏற்கனவே, செயல்பாட்டில் உள்ள 1912 என்ற பழைய எண்ணிற்கு வரும் அழைப்புகளும் இந்த எண்ணிற்கு மாற்றப்படும்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மின் தடைக்கான காரணம்
கடந்த 9 மாதங்களாக மின் வாரியப் பராமரிப்புப் பணிகளை ஏன் செய்யவில்லை என முன்னாள் அமைச்சர் தங்கமணி கூற வேண்டும். அப்போது செய்யாத பராமரிப்புப் பணிகளை, தற்போது மேற்கொள்வதால்தான் தற்போது மின் தடை ஏற்படுகிறது.
அதனை சரிசெய்ய பகுதி வாரியாக பிரிக்கப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. முன்னாள் அமைச்சர் தங்கமணி மீதான முறைகேடுகள் குறித்து சட்டப்பேரவையில் தெரிவிக்கப்படும். மின்சார வாரியத்தில் செயல்படுத்தப்பட உள்ள சீர்திருத்தங்கள் குறித்தும் சட்டப்பேரவையில் தெரிவிக்கப்படும்" என்றார்.
இதையும் படிங்க:மாநில அரசின் உரிமையை இந்த அளவு எந்த ஒன்றிய அரசும் பறித்ததில்லை - நிதியமைச்சர் பிடிஆர்