இந்தியாவின் 72வது குடியரசு தினத்தையொட்டி சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள தமிழ்நாடு பாரத சாரண சாரணிய இயக்க தலைமை அலுவலகத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, சாரண சாரணியரின் மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
மேலும் சிறப்பாக செயல்பட்ட சாரண சாரணியர்களுக்குச் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, "தமிழ்நாடு சாரண சாரணிய இயக்கத்தின் வளர்ச்சிக்காக கடந்த ஆண்டு 2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து மேலும் வளர்ச்சிக்கு ஒரு கோடி நிதி ஒதிக்கீடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் அந்த நிதி அளிக்கப்படும்.
பள்ளிகளில் பயிலும் சாரண சாரணியர்களுக்கு நடப்பு கல்வியாண்டில் ஒரு சீருடை அளிப்பதற்குத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கரோனா தாக்கத்தால் மாணவர்களுக்கு வழங்க முடியவில்லை. வரும் கல்வி ஆண்டில் பள்ளிகளில் பயிலும் சாரண சாரணியர் மாணவர்களுக்கு ஒரு சீருடை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இதன் காரணமாக, சாரண சாரணிய இயக்கத்தில் ஒரு லட்சம் பேர் கூடுதலாக சேர்வார்கள். தமிழ்நாடு முதலமைச்சரின் நடவடிக்கையால் அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் 405 பேர் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் சேர்ந்துள்ளனர். 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாற்றம் கொண்டு வருவது குறித்து பெற்றோர்கள், கல்வியாளர்களிடம் கருத்து கேட்டு வருகிறோம்.
குறைவான காலத்தில் மாணவர்கள் பொதுத்தேர்வு தயாராவதால் அதனைக் கருத்தில் கொண்டு வினாத்தாள் வடிவமைப்பை எளிமையாக்கலாமா அல்லது எந்த மாதிரியான மாற்றங்களை கொண்டுவரலாம் என்பது குறித்து கருத்துக்கள் கேட்கப்பட்டு வருகின்றன. கருத்துக்கள் பெறப்பட்டவுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.
பொதுத் தேர்வு எப்போது நடத்துவது என்பது குறித்து சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவித்தப் பின்னர் முடிவெடுத்து தேர்வுக்கான தேதி முடிவு செய்து அறிவிக்கப்படும். 9, 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி திறப்பது குறித்து ஏற்கனவே பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டது.
98 சதவீதம் பேர் இதற்கு ஆதரவு தெரிவித்து இருக்கின்றனர். இதுகுறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார். பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கரோனா தடுப்பு வழிமுறைகளை பள்ளி கல்வித்துறை சிறப்பாக மேற்கொண்டுள்ளது. பொது நூலகத் துறையில் முழு நேர நூலகங்கள், பகுதி நேர நூலகங்கள் முழுவதும் திறக்கப்பட்ட பின்னர் தினக்கூலி ஊழியர்கள் பணிக்கு அழைக்கப்படுவார்கள்" என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.