சென்னை: நுங்கம்பாக்கம் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் இன்று (டிச.29) இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் கல்விக்குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அந்த கூட்டத்தில் அமைச்சர் பேசும்போது, "முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி திருக்கோயில்கள் சார்பில் நடத்தப்படும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் ஏழை எளிய குழந்தைகளின் கல்வித் தரத்தை மேம்படுத்தவும், குறைவான கட்டணத்தில் தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகத் தமிழ்நாட்டில் உள்ள சிறந்த கல்வியாளர்களை ஒருங்கிணைந்து கல்விக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
ஆட்சி பொறுப்பேற்றுக் கடந்த ஏழு மாதங்களில் ஆன்மீகத்திற்கு எதிரான ஆட்சி என்ற நிலை மாறி திருக்கோயில்களுக்குப் பொற்கால ஆட்சி என்ற நிலை உருவாகியுள்ளது.
திருக்கோயில் நிர்வாகம் சார்பில் 35 பள்ளிகள், 9 கல்லூரிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது புதிதாக இந்தாண்டு தொடங்கப்பட்ட 4 கல்லூரிகளில் 1000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். அடுத்த கல்வியாண்டில் 6 புதிய கல்லூரிகள் தொடங்கப்படவுள்ளன.
இந்து சமய அறநிலையத்துறை சார்பாக நடத்தப்பட்டு வரும் கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் கல்வித் தரத்தைச் செம்மைப்படுத்தவும், மாணவர்களின் திறனை வெளிகொண்டுவர ஏற்படுத்த வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்தும், அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் குறித்தும், புதிதாகத் தொடங்கப்பட்ட கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் குறித்த ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.
மேலும், புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள நான்கு கல்லூரிகளுக்கான தேவையான புதிய கட்டடங்கள், மாணவர்கள் தங்கும் விடுதிகள், கூட்ட அரங்கம், விளையாட்டு மைதானம், ஆய்வகம், நூலகம், வாகனம் நிறுத்துமிடம், படிக்கும் அறை உள்ளிட்டவை சிறந்த முறையில் கட்டவும், அவற்றுக்குத் தேவையான சிறந்த உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தவும், கூடுதலாகத் தொடங்கப்பட உள்ள பாடத் திட்டங்கள் தொடர்பாகவும், கூடுதல் வகுப்பறைகள் அமைக்கவும், பொது அறிவுத் திறன் வளர்த்தல், மாணவர்களது கலைத் திறனை வெளிப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.
கல்விக்குழுவினரிடம் புதிய கல்லூரி கட்டட வரைபடங்கள் காண்பிக்கப்பட்டது. அதில் சில மாற்றங்கள் செய்யக் கல்வியாளர்கள் அறிவுரை வழங்கியுள்ளார்கள். அதன்படி மாற்றங்கள் செய்யப்பட்டு முதலமைச்சர் ஒப்புதலுடன் விரைவில் பணிகள் தொடங்கப்படும்" எனத் தெரிவித்தார்.
Ayyappa swamy statue eye opening: ஐயப்பன் சிலை கண் திறப்பு? சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல்