சென்னை: அம்பத்தூரில் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி அம்பத்தூர் காமராசர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைச்சர் சேகர் பாபு தலைமையில் நடைபெற்றது. இதில் சட்டப்பேரவை உறுப்பினர் ஜோசப் சாமுவேல், சென்னை மாவட்ட கல்வி முதன்மை அலுவலர் மார்க்ஸ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். அம்பத்தூர் சுற்றுவட்டாரப் பகுதியில் செயல்படும் நான்கு அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்த ஆயிரத்து 224 மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை அமைச்சர் வழங்கினார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், ''அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நான் இருக்கின்றேன். படியுங்கள், படிக்கும் மாணவர்களுக்கு படிக்கட்டாக நமது முதலமைச்சர் இருக்கின்றார். நம்மிடம் இருந்து பிரிக்க முடியாத ஒன்று படிப்பு தான் என முதலமைச்சர் நித்தம் படிக்க அறிவுறுத்தி வருகிறார்'' என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், ''சென்னை, கொளத்தூர், வில்லிவாக்கம், திருவிக நகர், எழும்பூர், அம்பத்தூர் துறைமுகம் உள்ளிட்ட ஆறு தொகுதிகளைச் சேர்ந்த 8ஆயிரத்து 700 மாணவர்களுக்கு இன்று (ஜூலை 30) ஒரே நாளில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன. இன்று மாலை வீடு திரும்பும் மாணவர்கள் மகிழ்ச்சியோடு தங்களது மிதிவண்டியில் செல்வார்கள்’’ என்றார்.
பள்ளியில் இந்நிகழ்ச்சி காலை 10 மணியளவில் நடைபெறும் என ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் நான்கு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகளை 9 மணிக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் வரவழைத்து அமர வைக்கப்பட்டனர். ஆனால், அமைச்சர் மற்ற பள்ளிகளுக்குச் சென்றுவிட்டு வருவதற்கு நேரம் தாமதமாகியது. இதனால், ஆயிரத்து 244 மாணவர்கள் அனைவரும் அமைச்சர் வருகைக்காக சுமார் நான்கு மணி நேரம் காத்திருந்து சோர்ந்து போயினர்.
இதையும் படிங்க: ‘இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை கொண்டுவந்தது திமுக தான்’ - துரைமுருகன் பேச்சால் குழம்பிய அதிகாரிகள்!