சென்னை: இன்று (அக்.11) நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இறுதி நாள் நிகழ்வில், சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வந்தனர். அந்த வகையில், பூம்பாறை திருக்கோயிலில் ராஜகோபுரம் கட்டி தரப்படும் எனவும், புனரமைக்கும் பணிகள் உடனடியாக தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தொடரில் வினாக்கள் விடைகள் நேரத்தில், பழனி தண்டாயுதபாணி திருக்கோயில் கட்டுப்பாட்டில் உள்ள கொடைக்கானல் சித்தர் போகனுர் வடிவமைத்த முருகன் சிலை அமைந்துள்ள திருக்கோயிலுக்கு ராஜகோபுரம் கட்டித் தர நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா எனவும், அதே போன்று தினசரி 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் பொதுமக்கள் அங்கு வருகை தரக்கூடிய நிலையில், சுபமுகூர்த்த நாட்களில் திருமணம் நடைபெறுவதற்காக திருமண மண்டபமும் கட்டித் தர அரசு நடவடிக்கை மேற்கொள்ளுமா என சட்டமன்ற உறுப்பினர் செந்தில் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்துப் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, பூம்பாறை பகுதியில் உள்ள திருக்கோயிலுக்கு ராஜகோபுரம் கட்டித் தரப்படும் என்றும், ஒன்பது நிலை, ஏழு நிலை, ஐந்து நிலை என திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு 36 ராஜகோபுரங்கள் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், அதே போன்று பூம்பாறை திருக்கோயில் புனரமைக்கும் பணிகளும் உடனடியாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.
இதையும் படிங்க: “அத்திக்கடவு அவிநாசி திட்டம் 2 அறிக்கை தயார்” - அமைச்சர் துரைமுருகன் தகவல்!