சென்னை: இந்து சமய அறநிலையத் துறை மீதான மானியக் கோரிக்கையின்போது எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி. வேலுமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் சின்னதுரை ஆகியோர் பல ஆண்டுகளாக கோயில் நிலங்களில் குடியிருக்கும் மக்களுக்கு குடியிருப்பு பட்டா வழங்க வழிவகை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தனர்.
இதற்குப் பதிலளித்துப் பேசிய துறையின் அமைச்சர் சேகர்பாபு, " திருக்கோயில் நிலங்களில் குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்க வழிசெய்யும் மசோதாவிற்கு 2019ஆம் ஆண்டு கடந்த அதிமுக ஆட்சியில் நீதிமன்றம் தடைவிதித்தது. இதன் மூலம் கோயில் நிலங்களில் பல ஆண்டுகாலமாக குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்க முடியாத சூழல் ஏற்பட்டது.
இதனைச் சரிசெய்யும் வகையில் முதலமைச்சராக ஸ்டாலின் பதவியேற்ற பிறகு இது தொடர்பான துறை சார்ந்த ஆய்வுக் கூட்டம் நடந்தது. தடை ஆணையைத் திரும்பப் பெறுவதற்கான வழிவகைகளை ஏற்படுத்த வேண்டும் என்று ஸ்டாலின் ஆணையிட்டிருக்கிறார்.
அதனடிப்படையில் சீராய்வு மனு மூலம் தடையாணை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. கூடிய விரைவில் தடை திரும்பப் பெறப்பட்டு கோயில் நிலங்களில் குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்க தமிழ்நாடு அரசு வழிவகை செய்யும்.
மேலும், பழங்காலத்தில் வாழ்ந்த மன்னர்கள், ஜமீன்தார்கள், பண வசதி படைத்தவர்கள் தங்கள் சொந்த நிலங்களை கோயில்களுக்குத் தானமாக வழங்கினர். தானமாக வழங்கிய கோயில் நிலங்களுக்கு பட்டா வழங்குவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. ஆகையால் சிக்கல்கள் அனைத்தும் சீர்செய்யப்பட்டு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
இதையும் படிங்க: விநாயகர் சதுர்த்திக்கு தடை ஏன்? அமைச்சர் சேகர்பாபு விளக்கம்