சென்னை: அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று பாடி, கைலாசநாதர் கோயில் மற்றும் திருவாலீஸ்வரர் கோயில்களின் திருப்பணிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, "வடபழனி ஆண்டவர் கோயிலில் சனிக்கிழமையன்று சாமி தரிசனம் செய்ய வருகை தந்த உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் அவர்களுக்கு ஏற்பட்ட விரும்பத்தகாத நிகழ்வுக்கு எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமையே டிக்கெட் விற்பனையாளர் ரேவதி, அலுவலக உதவியாளர் ரவி ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்திருக்கின்றோம். திருக்கோயிலின் ஆய்வாளர் ஜெயேந்திரன் உடனடியாக மீஞ்சூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தவறு யார் செய்திருந்தாலும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்", என தெரிவித்தார்.
அதேபோல திருவாலீஸ்வரர் கோயிலானது 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். இந்த கோயிலுக்கும் திருப்பணிகள் மேற்கொண்டு குடமுழுக்கு நடத்தப்படவுள்ளது. தமிழர்களின் பண்பாட்டையும், கலாசாரத்தையும் பறை சாற்றும் வகையில் திகழ்கின்ற கோயில்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் 1000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட கோயில்களை புனரமைத்திட ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு வழங்கினார்கள். அதன் மூலம் இந்தாண்டு 120 கோயில்கள் தெரிவு செய்யப்பட்டு, புனரமைப்பிற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, எனத் தெரிவித்தார்.
தமிழ்நாட்டினை நான்கு மண்டலங்களாகப் பிரித்து ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு துணை ஆட்சியரை நியமித்து அவர் தலைமையில் பறக்கும் படைகளை உருவாக்கி கோயில்களில் திடீர் ஆய்வுகளை மேற்கொண்டு சிறிய அளவிலான பிரச்னைகளுக்கும், தவறுகளுக்கும் இடங்கொடா வண்ணம் நெறிமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
இதையும் படிங்க: வடபழனி கோயிலில் முறைகேடு - இந்து அறநிலையத்துறைக்கு நீதிபதி பரிந்துரை