சென்னை : கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலுக்கு கற்கள் பதித்திட்ட தங்கத்தினாலான பாண்டியக் கொண்டை (கிரீடம்) நன்கொடையாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு முன்னிலையில் சமர்பிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர் பாபு, "கோவை மாவட்டம் மேட்டுப்பளையம், காரமடையை சேர்ந்த அரங்கநாதர் சுவாமி கோவிலுக்கு 26.42 லட்சம் மதிப்புள்ள பாண்டியன் கொண்டை கிரீடம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், 3.5 லட்சம் சிலைகள் பதிவு செய்யப்படாமல் உள்ளது என்று பொன் மாணிக்கவேல் கூறியதைப் பார்த்தேன். அவரும் இந்த துறையில் அலுவலராக இருந்துள்ளார். முதலமைச்சர் கவனத்திற்கு எடுத்துச் சென்று நடவடிக்கை எடுக்கப்படும். அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கும் சிலைகள் குறித்து தகவல் கொடுக்கும் பட்சத்தில் கோயில்களில் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காரமடையில் உள்ள அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலுக்கு காரமடை அரங்கன் வழிபாட்டுக் குழுவினரால் உற்சவருக்குச் சாத்துப்படி செய்யும் கல் பதித்த தங்கத்தாலான பாண்டியக் கொண்டை (கிரீடம்) திருக்கோயிலுக்கு உபயமாகத் தொழிலதிபர் எம்.எம்.ராமசாமி மற்றும் திருக்கோயில் மிரசுதாரர் கே.ஆர். கிருஷ்ணன் ஆகியோரால் ஒப்படைக்கப்பட்டது.
இந்த தங்கத்தின் எடை 509.080 கிராம், கற்களின் எடை 41.220 கிராம் மொத்தம் 552.180 கிராம். இதன் மதிப்பு ரூ. 26.42 லட்சம் ஆகும். இதுபோன்ற நல்ல செயல்களில் ஈடுபடும் பக்தர்களைப் பாராட்டுகின்றோம். இனி வருங்காலங்களில் திருக்கோயில்களின் அடிப்படை வசதிகள் மற்றும் திருப்பணிகளுக்குப் பக்தர்களின் நன்கொடைகள் வரவேற்கப்படுகின்றன" என்று அமைச்சர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சென்னை விமான நிலையத்தில் வெள்ள அபாயத்தை முன்னதாகவே அறிந்து கொள்ளும் கருவி