தமிழ்நாட்டிற்கு 2016ஆம் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ராசிபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா வெற்றி பெற்றார்.
இந்த தேர்தலில் அதிமுக வேட்பாளரான அமைச்சர் சரோஜா, திமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் துணை சபாநாயகர் வி.பி.துரைசாமியைவிட 9,631 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இவரின் வெற்றியை எதிர்த்து தோல்வியடைந்த திமுக வேட்பாளர் வி.பி.துரைசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார்.
அதில், பணம் பரிசு பொருட்களை வாக்காளர்களுக்கு வழங்கி, அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்தி வாக்குகளை பெற்ற டாக்டர். சரோஜாவின் வெற்றி செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு மீது அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வி.பாரதிதாசன் இன்று இறுதி தீர்ப்பளித்துள்ளார்.
அதில், தேர்தல் வழக்கில், அமைச்சருக்கு எதிராக தீவிர குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. மனுதாரர் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு முறைகேடு எந்த தேதியில் நடந்தது ?, எங்கு நடந்தது ?, எத்தனை மணிக்கு நடந்தது ?, வாக்குக்காக பணத்தை யார் கொடுத்தது ?, அதை யார் வாங்கியது ? என்பன உள்ளிட்ட விவரங்கள் நீதிமன்றத்தின் முன்பு சமர்ப்பிக்கப்படவில்லை.
ராசிபுரம் சட்டப்பேரவை தேர்தலில் சரோஜா வெற்றியை செல்லாது என அறிவிக்க கோரிய மனுதாரரின் கோரிக்கையை ஏற்க முடியாது. அவரது மனுவை தள்ளுபடி செய்கிறேன் என கூறியிருந்தார்.
இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.
இதையும் படிங்க : பெரியார் குறித்த சர்ச்சை பேச்சு எடுபடாது - டி. ராஜா