சென்னை: மந்தைவெளி மற்றும் பட்டினப்பாக்கம் போக்குவரத்துக் கழக பணிமனைகளில் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மழைநீர் சூழ்ந்துள்ள இடங்களை முதலமைச்சர் பார்வையிட்டு நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 31 பணிமனைகள் சென்னையில் அமைந்துள்ளன. தமிழ்நாடு உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனத்தின் மூலமாக, 16 பணிமனைகள் மற்றும் பேருந்து நிலையங்கள் பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளுடன் நவீனப்படுத்தப்பட உள்ளன.
மந்தைவெளி மற்றும் தி.நகர் ஆகிய இரண்டு பணிமனைகளில் மட்டுமே மழைநீர் தேங்கியுள்ளதாகத் தெரியவந்ததனைத் தொடர்ந்து, இந்த இரண்டு பணிமனைகளிலும் ஆய்வு மேற்கொண்டேன். மந்தைவெளி பணிமனையில் மழைநீரானது முழுவதுமாக அகற்றப்பட்டுள்ளது. தி.நகர் பேருந்து நிலையத்தில் மழை நீரினை மின்மோட்டார் மூலம் உடனடியாக அகற்றிடும் பணி நடைபெற்றுவருகிறது. கூடுதல் மின் மோட்டார்கள் கொண்டு மழைநீரினை அகற்றிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மந்தைவெளி பணிமனை மற்றும் பேருந்து நிலையமானது ஒரு ஏக்கர் 44 சென்ட் பரப்பளவில் அமைந்துள்ளது. இதில் 33 சென்ட் நிலத்தினை மெட்ரோ இரயில் திட்டத்திற்காக வழங்கப்பட உள்ளது. இதற்குப் பதிலாகப் பட்டினப்பாக்கம் பேருந்து நிலையத்தில், இரண்டரை கோடி ரூபாய் மதிப்பீட்டில் வணிக வளாகங்களுடன் கூடிய நவீன பேருந்து நிலையம் மெட்ரோ இரயில் நிறுவனத்தால் கட்டமைக்கப்பட உள்ளது.
இந்த மழைக் காலங்களிலும் தமிழ்நாடு முழுவதும் 17,576 பேருந்துகள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இயக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் இன்றி பேருந்து சேவையானது தொடர்ந்து செயல்பட்டு வருகிறது" என்றார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் புதிதாக 835 பேருக்கு கரோனா பாதிப்பு