சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் பொது பாடத்திட்டம் அமல்படுத்தப்பட வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்தின் மூலம் பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டு பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதற்கு பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், தன்னாட்சிக் கல்லூரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மேலும், கல்லூரிகளில் போதுமான கட்டமைப்பு வசதி இல்லாமல் உள்ளது. தேசிய கல்விக் கொள்கை 2020 க்கு மாற்றாக தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட உள்ள மாநில கல்விக் கொள்கைக்கேற்ப பொது பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் உயர் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மாநில பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களுடன் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆலோசனை மேற்கொண்டு உள்ளார்.
இந்த ஆலோசனையின் பொழுது தமிழ்நாடு உயர்கல்வி மன்றம் பரிந்துரைத்த பாடத்திட்டங்களை பல்கலைக்கழகங்களில் நடைமுறைப்படுத்துவதற்கும் கல்விக் குழு கூட்டத்தில் அதற்கு அனுமதி பெறுவதற்கும் நடவடிக்கை எடுப்பது குறித்து விவாதிக்கப்படுகிறது.
தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்தின் மூலம் 298 புதிய பாடப்பிரிவுகள் தயாரிக்கப்பட்டு பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அந்தப் பாடத் திட்டத்தில் 75 சதவீதத்தை கல்லூரியில் அமல்படுத்த வேண்டும் எனவும் 25 சதவீதத்திலும் மற்றும் அதற்கு மேல் அவர்களுக்கு தேவையான பாடத்திட்டத்தை சேர்த்துக் கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் ஒரு சில பல்கலைக்கழகங்களில் உள்ள பாடத்திட்ட குழு மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்கள் இந்த பாடத்திட்டத்திற்கு எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். தமிழ் மற்றும் ஆங்கில பாடத்திட்டத்தை அனைத்து பல்கலைக்கழகங்களும் ஒரே மாதிரி அமல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு உயர்வு கல்வி மற்றும் அறிவுறுத்தி உள்ளது அதற்கும் எதிர்ப்பு எழுந்துள்ளன.
மேலும், பல்கலைக்கழகங்களில் நடப்பாண்டில் சேர்ந்த மாணவர் எண்ணிக்கை குறித்து ஆய்வு செய்யப்படுகின்றன. கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வரும் இந்நிலையில் பல்கலைக்கழகங்களில் எவ்வாறு நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடலாம் என்பது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.
கல்லூரிகளுக்கான கட்டமைப்பு வசதிகள், பணியாளர் நியமனம் உள்ளிட்டவை குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக தெரிகிறது. பல்கலைக்கழக வேந்தரும் தமிழ்நாடு ஆளுநருமான ஆர்.என்.ரவி நேற்று (ஜூலை 20ஆம் தேதி) தனியார் பல்கலைக்கழகங்களுடன் தேசியக் கல்விக் கொள்கை 2020 அமல்படுத்துவது குறித்து ஆலோசித்து வலியுறுத்தினார். தமிழ்நாட்டில் உள்ள மாநில பல்கலைக்கழகங்கள் தேசிய தரவரிசை பட்டியலில் இடம் பெறுவது குறித்த கருத்து அரங்கை அடுத்த வாரம் மாநில பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் நடத்த உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, ஜூன் 31ஆம் தேதி உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, துணைவேந்தர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது தமிழ்நாடு உயர் கல்வி மன்றம் தயார் செய்துள்ள பாடத்திட்டத்தினை அனைத்து பல்கலைக்கழகங்களின் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளில் 75 சதவீதம் நடத்த வேண்டும் என்றும், அப்போதுதான் அந்தப் படிப்புகள் பிற பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் படிப்பிற்கு இணையானது என சான்றிதழ் உயர்கல்வித்துறையால் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:கல்லூரி மாணவர்கள் மீது ஏன் குண்டர் சட்டம் போடப்பட்டது ? - விளக்கம் அளிக்க மதுரைக்கிளை உத்தரவு!