சென்னை: சைதாப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் 14 வது பட்டமளிப்பு விழா இன்று (நவ.8) நடைபெற்றது. இதில் தமிழ்நாடு ஆளுனரும், பல்கலைக்கழகத்தின் வேந்தருமான ஆர்.என்.ரவி கலந்துகொண்டு 485 மாணவர்களுக்கு நேரடியாக பட்டயச் சான்றிதழ்களை வழங்கினார்.
இந்த பட்டமளிப்பு விழாவில் 3 ஆயிரத்து 318 முதுகலை பட்டதாரிகள், 5 ஆயிரத்து 302 இளங்கலை பட்டதாரிகள், ஆயிரத்து 42 தொழில் கல்வி பட்டயதாரிகள், 82 பட்டய பட்டதாரிகள், 24 முனைவர் பட்டம், 8 எம்.ஃபில் பட்டதாரிகள் என மொத்தம் 9 ஆயிரத்து 776 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது.
பட்டமளிப்பு விழாவை முன்னிட்டு பல்கலைக்கழகத்திற்கான விழா அழைப்பிதழில், தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் மற்றும் உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் கார்த்திக் ஆகியோரின் பெயர் இடம் பெற்றிந்தது. தொடர்ந்து வரவேற்பு பதாகைகளிலும் அமைச்சர் பொன்முடியின் பெயர் இடம் பெற்று இருந்தது. இந்நிலையில் அமைச்சர் பொன்முடி இந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்காமல் புறக்கணித்தார்.
சுதந்திரப் போராட்ட வீரருமான என். சங்கரய்யாவிற்கு கௌரவ முனைவர் பட்டம் வழங்க தமிழ்நாடு அரசு ஆளுநருக்கு கடிதம் எழுதியது. தமிழ்நாடு அரசின் இந்த மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க மறுப்புத் தெரிவித்துள்ளார். இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், ஆளுநர் பங்கேற்கும் பட்டமளிப்பு விழாக்களில் அமைச்சர் பொன்முடி புறக்கணித்து வருகிறார்.
குறிப்பாக கடந்த 2ந் தேதி மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவிலும், ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றிருந்த நிலையில், அமைச்சர் பொன்முடி புறக்கணித்து கண்டனங்களை பதிவு செய்தார். இதேப் போல் இன்று (நவ.8) சைதாப்பேட்டையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவையும் புறக்கணித்தார்.
முன்னதாக, உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி மற்றும் உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் கார்த்திக் ஆகியோரின் பெயர்கள் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா செய்தி குறிப்பில் இடம் பெற்றிருந்தது. ஆனால் அமைச்சர் பொன்முடி பங்கேற்க வில்லை என தெரிந்ததும் அவரது பெயர் செய்தி குறிப்பு மற்றும் விளம்பரங்களில் இருந்து மறைக்கப்பட்டது.
இந்நிலையில், பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட இந்திய தேசிய அறிவியல் தொழில் நுட்பத்தின் தலைவர் சுத்தோஷ் சர்மா பேசும்போது, சிறப்பு விருந்தினருக்கு வழங்கப்பட்ட பட்டமளிப்பு விழா உரை குறிப்பில், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் உயர்கல்வி துறை முதன்மை செயலாளர் கார்த்திக் பெயர் இடம்பெற்று இருந்தது. அவர்கள் இருவரும் பங்கேற்காத நிலையிலும், சிறப்பு விருந்தினர் அவர்களது பெயரையும் கூறி வரவேற்றார். தொடர்ந்து தமிழ்நாடு ஆளுநர் பங்கேற்று வரும் பட்டமளிப்பு விழாக்களை அமைச்சர் பொன்முடி புறக்கணித்து வருவது பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
இதையும் படிங்க: அதிமுக கொடி, சின்னம் பயன்படுத்த தடை.. ஓபிஎஸ் மேல்முறையீடு - அவசர வழக்காக விசாரணை?