சென்னை: ஐஐடி நிறுவனத்தின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதை உறுதி செய்யுமாறு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஐஐடி இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்திக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், "சமீபத்தில் 58ஆவது ஆண்டு பட்டமளிப்பு விழாவை கடந்த நவம்பர் 20 ஆம் தேதியன்று ஐஐடி வளாகத்தில் நடந்தது. அதில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசு வழங்கிய 250 ஹெக்டேர் நிலப்பரப்பில் 1959ஆம் ஆண்டு சென்னை ஐஐடி நிறுவப்பட்டது. பிறகு அதன் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் பல்வேறு வழிகளில் அரசு பங்காற்றி வருகிறது.
மாநில அரசின் சார்பாக கிரையோ-எலக்ட்ரான் நுண்ணோக்கிக்கான தேசிய வசதியை பெறுவதற்கு ரூ.10 கோடி நிதியுதவி கோரி, உயர்கல்வித்துறையின் முதன்மைச் செயலாளருக்கு நீங்கள் சமீபத்தில் கடிதம் எழுதியுள்ளீர்கள். இது ஆய்வுக்குள்பட்டு உள்ளது.
எனினும் சமீபத்தில் முடிவடைந்த பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தை புறக்கணித்தது வருத்தமளிக்கிறது. இந்தியக் குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட பிரமுகர்கள் பங்கேற்கும் விழாக்கள் உள்பட அனைத்து அரசு விழாக்களிலும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடப்படுகிறது.
இனிவரும் காலங்களில் ஐஐடியின் அனைத்து நிகழ்ச்சிகளிளும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதை உறுதி செய்ய வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: Mudichur Flood: மீண்டும் மழையில் தத்தளிக்கும் முடிச்சூர்