சென்னை: ஜிஎஸ்டி கவுன்சில் அறிவுறுத்தலின்படி அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு சான்றிதழ்கள் நகல் பெறுதல், உண்மைத்தன்மை அறிதல் போன்ற சேவைகளுக்கு ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஜிஎஸ்டி கவுன்சில், அண்ணா பல்கலைக்கழகத்தில் ஜிஎஸ்டி வசூல் செய்யாததற்கு கண்டனம் தெரிவித்ததுடன் அதனை வசூலிக்க வேண்டும் எனவும் அறிவித்திருந்தது.
இந்நிலையில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி எழுதியுள்ள கடிதத்தில், "சமூக பொருளாதார வளர்ச்சிக்கு கல்வி முக்கிய பங்காற்றுகிறது. உயர்கல்வியில் தேசிய சராசரியான 27.1 என்ற விழுக்காட்டை விட தமிழ்நாட்டில் 51.4 என்ற விழுக்காட்டில் மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். தமிழ்நாட்டில் அதிக அளவில் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் கலை, அறிவியல், பொறியியல், சட்டம், மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்வி படிப்புகளில் தோராயமாக 35.25 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர்.
ஜிஎஸ்டி வரி விலக்கு
உயர்கல்வி நிறுவனங்களில் சில கல்வி சார்ந்த நடவடிக்கைக்கு ஜிஎஸ்டி விதிக்கப்பட உள்ளதாக பல்கலைக்கழக துணைவேந்தர்கள், கல்லூரி முதல்வர்கள் தெரிவித்தனர். குறிப்பாக மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் தவிர இடப்பெயர்வு சான்றிதழ் போன்றவற்றிற்கு ஜிஎஸ்டி கவுன்சில் அறிவுரையின்படி ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளதாக கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் 28ஆம் தேதி வெளியிடப்பட்ட ஜிஎஸ்டி அறிவிப்பில் கல்வி சார்ந்த நடவடிக்கைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வரி விதிப்பு உயர் கல்வி சேர்க்கை விழுக்காடு குறைய வழிவகுப்பதுடன் கிராமப்புறம் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். மேலும் பெற்றோருக்கு கூடுதல் நிதிச் சுமையாக அமையும்.
அமைச்சர் பொன்முடி கோரிக்கை
பல்வேறு சவால்களுக்கு மத்தியில் மாநில அரசு இளம் தலைமுறையினரை கல்வி பெற ஊக்குவித்து அவர்களின் சமூகப் பொருளாதாரத்தில் மேம்பாடு அடைவதற்கான பணியை செய்து வருகிறது.
எனவே மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு உயர் கல்வி சார்ந்த அனைத்து கட்டண நடைமுறைகளுக்கும் ஜிஎஸ்டி வரி விதிப்பில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்" எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: மாசுக் கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் தற்கொலை