கன்னியாகுமரியில் உள்ள கோயில்களை ஆய்வுசெய்வதற்காக இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு நேற்று (ஜூலை 12) அம்மாவட்டத்திற்குச் சென்றார். ஆய்வை முடித்துவிட்டு இன்று சென்னை விமான நிலையம் வந்த இந்து அறநிலைத் துறை அமைச்சர் சேகர் பாபு, அங்கு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அவர் பேசுகையில், "தமிழ்நாட்டில் திருப்பணிகள் நடைபெறவுள்ள திருக்கோயில்களுக்கும், சிதிலமடைந்து உள்ள கோயில்களில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவும் சுமார் 100 கோடி ரூபாய் ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.
திருப்பணிகள் நடைபெற்றுவரும் கோயில்களில் குடமுழுக்கு நடத்துவதற்கு நேரடியாகச் சென்று இந்து அறநிலைத் துறை அலுவலர்களுடன் கள ஆய்வுகளை மேற்கொண்டுள்ளோம். நேற்றும், இன்றும் கன்னியாகுமாரி மாவட்டத்தில் முழுமையாக எங்கள் சுற்றுப்பயணத்தை முடித்துள்ளோம்.
குமரி கோயிலில் குடமுழுக்கு
அங்கு 26 திருக்கோயில்களில் குடமுழுக்கு செய்ய வேண்டியிருக்கிறது. சுமார் 20 ஆண்டுகள் ஆகியும் குடமுழுக்கு செய்யப்படாமல் உள்ளது. அதனை நேரடியாகச் சென்று கள ஆய்வு செய்து ஆலோசனை மேற்கொண்டுள்ளோம்.
கன்னியாகுமரியில் உள்ள சுசீந்திரம் கோயிலில் 2010ஆம் ஆண்டுக்குப் பிறகு குடமுழுக்கு நடத்தப்படாமல் உள்ளது. அதை நடத்துவதற்கான ஆலோசனைகளை மேற்கொண்டுள்ளோம். இந்த ஆண்டு இறுதிக்குள் அந்தக் கோயிலில் குடமுழுக்கு நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நிலங்களை மீட்போம்
அந்தக் கோயிலுக்குச் சொந்தமான பல நிலங்கள் ஆக்கிரமிப்புச் செய்யப்பட்டுள்ளது. அதை மீட்பதற்காக ஆலோசனைகள் செய்யப்பட்டு நீதிமன்றம் மூலம் சென்று ஆராய்ந்து கோயில் நிலங்களை மீட்கப்படும்.
கடந்த காலங்களில் இந்து அறநிலையத் துறையில் தேக்கம் அடைந்த பணிகளை விரிவுபடுத்தவும், புதிதாக பணிகளை மேற்கொள்ளவும் ஆய்வு செய்துள்ளோம். அனைத்துப் பணிகளும் போர்க்கால அடிப்படையில் செயல்படுத்தப்படும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கப் பணிகள் விரைவில் நிறைவுபெறும்' - கனிமொழி