சென்னை: தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தில் வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஆய்வு கூட்டத்தில் முன்வைக்கபட்ட 18 கோரிக்கைகள் நிறைவேற்ற முடியாது என தெரிவிக்கப்பட்ட நிலையில் மீதமுள்ள கோரிக்கைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.
சென்னை போன்ற பெரு நகரங்களில் 12 மீட்டர் உயரம் வரை தற்போது கட்டிடம் கட்ட அனுமதி உள்ளதாகவும், அதனை 13 மீட்டர் ஆகவோ 14 மீட்டர் ஆகவோ உயர்த்த வேண்டும் என கோரிக்கை வரப்பட்டுள்ளதாகவும், அதை குறித்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
மேலும் கோயில் நகரங்களில் தொடர் கட்டுமானங்கள் மேற்கொள்ள கோரிக்க முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், மதுரை, திருவண்ணாமலை போன்ற கோயில் நகரங்களில் தொடர் கட்டுமானங்கள் மேற்கொள்வதற்கான ஆய்வுகள் நடத்தப்பட்டு, அது தொடர்பான அறிவிப்பு 10 அல்லது 15 நாட்களுக்குள் வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.
தமிழகத்தில் உள்ள நிலப்பரப்பில் ஏழு சதவீதம் மட்டுமே மாஸ்டர் பிளான்கள் வரையறை செய்யப்பட்டுள்ள நிலையில், அது தற்போது 19 சதவீதமாக உயர்த்தப்பட்டிருப்பதாகவும், அதனை மேலும் 22 சதவீதமாக உயர்த்தப்படும் என தெரிவித்தார். கட்டடம் கட்டும்போது அரசிடம் கண்டிப்பாக அனுமதி பெற்று கட்ட வேண்டும் எனவும், முன் அனுமதி பெறாமல் நிறைவு சான்றிதழ் பெற முற்படும்போது விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை எனில் அந்தக் கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்படும் என எச்சரித்தார்.
அரசு அங்கீகாரம் பெறாத மனை பிரிவுகள் மற்றும் தனி மனைகள் வரைமுறைப்படுத்துவதற்கான விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளதாகவும், அதை ஒரு சிலர் மட்டுமே பயன்படுத்தி உள்ளதாகவும், இதன் காரணமாக மேலும் ஆறு மாத காலம் அதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர், "விவசாய நிலங்கள் விற்பனைக்கு வரும்போது நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து, அதற்கு பிறகு தான் விற்பனைக்கு வருகிறது. அதே போல நீர்நிலை பகுதிகளில் கட்டிடம் கட்டினால் அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கும். ஏனென்றால் நீர்நிலைகளை சுற்றி எவ்வளவு தூரத்தில் கட்டிடம் கட்டலாம் என வழிவகை வகுத்துள்ளோம். அதன்படி இருந்தால் அனுமதி வழங்கபடும், அப்படி இல்லாத பட்சத்தில் அனுமதி வழங்கபடாது. அதையும் மீறி அனுமதி பெறாமல் கட்டினால் அரசு துறை ரீதியான தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளளும் என எச்சரிக்கை விடுத்ததோடு பொதுமக்கள் அல்லது ரியல் எஸ்டேட் உரிமையார்கள் யாராக இருந்தாலும் கட்டிடங்களை கட்டும் முன் முறையாக உரிமம் பெற்று பின் கட்டிடங்களை கட்ட வேண்டும்" எனக் கூறினார்.
இதையும் படிங்க: "லஞ்சத்தை கட்டுப்படுத்துங்க ஐயா" - திருப்பூர் கலெக்டரிடம் கதறிய விவசாயிகள்!