சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் வருகின்ற 19ஆம் தேதி முதல் ஜூன் 30ஆம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், கரோனா நிவாரண நிதி வீடு தேடி வரும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அந்த வகையில், பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கரோனா தடுப்பு குறித்த ஆய்வுக் கூட்டம் வளசரவாக்கம் மண்டலத்தில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர்கள் எம்.ஆர். விஜயபாஸ்கர், பெஞ்சமின் ஆகியோர் அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டனர். பின்னர், மதுரவாயல் காவல் நிலையத்தில் காவலர்களுக்கு கரோனா நிவாரண பொருள்களை வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், "2 லட்சத்து 15 ஆயிரம் முகக் கவசம் வளசரவாக்கம் மண்டலத்தில் மட்டும் இதுவரை வழங்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் அறிவித்துள்ள 12 நாள் முழு ஊரடங்கை முழுமையாக செயல்படுத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறைந்த அளவிலான தெருக்களை செக் போஸ்ட் அமைத்து காவல் துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
இளைஞர்கள் இருசக்கர வாகனங்களில் தேவையின்றி சுற்றுவதை தவிர்க்க வேண்டும். மீறினால் காவல் துறை மூலம் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தற்போது ஒரு ஏரியாவில் ஒரு மளிகை கடை, பால் பூத், மெடிக்கல் இருந்தால் அதை லாக் செய்ய அறிவுரை வழங்கியுள்ளோம. 12 நாள்களும் முழு ஊரடங்கை முழுமையாக தீவிரமாக கடைப்பிடித்து கரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவர ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இந்த 12 நாள் தடை உத்தரவு கடுமையாக இருக்கும்" என்றார்.
இதையும் படிங்க: சீன ராணுவ தாக்குதலில் உயிரிழந்த வீரரின் குடும்பத்திற்கு ரூ. 20 லட்சம் நிதியுதவி