தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற கூட்டத்தில் தகவல் தொழில் நுட்பவியல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில், பங்கேற்று பேசிய உறுப்பினர்களின் கேள்விகளுக்கு தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் எம்.மணிகண்டன் பதிலளித்து, புதிய அறிவிப்புகள் வெளியிட்டார்.
அதில், 'தகவல் தொழில் நுட்பவியல் துறை வளர்ச்சிக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வந்த ஒரு கோடி ரூபாய் நிதியை ஐந்து கோடியாக உயர்த்தி வழங்கப்படும். தமிழ்நாடு மாநில தரவு மையத்தில் தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தால் அமைக்கப்பட்டிருக்கும் கிளவுட் கம்ப்யூட்டிங் அமைப்பு இனி முதற்கொண்டு தனிப்பட்ட அடையாளத்துடன் தமிழ் மேகம் என்ற பெயரில் அழைக்கப்படும். இந்தத் திட்டத்திற்கு ரூ.5 கோடி செலவு ஏற்படும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
ஐ ஓ டி எனப்படும் பொருட்களின் இணையம், பொதுமக்கள் தங்கள் வீட்டில் உள்ள உபகரணங்களை தொலைப்பேசி செயலி மூலம் எந்நேரமும் எவ்விடத்திலும் கட்டுப்படுத்த முடியும். முதல் கட்டமாக இந்த தொழில்நுட்பம் சென்னையில் செயல்படுத்தப்பட உள்ளது. இதன் உத்தேச மதிப்பீடு 50 லட்சம் ஆகும். தமிழ்நாடு அரசின் அனைத்து பணியாளர்களுக்கும் தேசிய தகவலியல் மையத்தின் உதவியுடன் தனிநபர், அலுவல் சார்ந்த மின்னஞ்சல் முகவரிகள் தமிழ்நாடு மின் ஆளுமை முகமையால் வழங்கப்படும்.
அரசு வழங்கும் சேவைகளை பொதுமக்கள் மொபைல் செயலியில் பெற ஒற்றை கைபேசி செயலி 50 லட்சம் ரூபாய் செலவில் உருவாக்கப்படும். தமிழ் இணைய கல்விக் கழகத்தில் கணினி தமிழுக்கென தனி பிரிவு ஆண்டொன்றுக்கு ரூ.50 கோடி செலவில் உருவாக்கப்படும். புதிதாக இரண்டு கேபிள் டிவி பேக்குகளை அரசு கேபிள் டிவி நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது' என்றார்.