சென்னை: ட்ரீம் ரன்னர்ஸ் நடத்திய மெய்நிகர் மாரத்தானில் இன்று (அக். 8) மா. சுப்பிரமணியன் கலந்துகொண்டு ஓடினார்.
பெசன்ட் நகரில் தொடங்கி சாந்தோம், தலைமைச் செயலகம் வழியாக மெரினா வந்தடைந்து 21.1 கி.மீ. தூரத்தை 2 மணி நேரம் 20 நிமிடத்தில் ஓடி தனது 131ஆவது மாரத்தானை நிறைவுசெய்து பதக்கம் வென்றார்.
மாரத்தானிற்கான காரணம்
மாரத்தான் ஓட்டத்திற்குப் பிறகு செய்தியாளரிடம் பேசிய அமைச்சர், "இளைஞர்களுக்கு உடற்பயிற்சி செய்வதில் முன்மாதிரியாக, தாம் வாழ்ந்த 95 வயதிலும் உடற்பயிற்சி, யோகா செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தியவர் கருணாநிதி. அவர் வழியில் முதலமைச்சர் ஸ்டாலினும் உடற்பயிற்சி, சைக்கிளிங் செய்துவருகிறார்.
நான் 20 ஆண்டுகளாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு, 2004ஆம் ஆண்டு நடந்த ஒரு பெரும் விபத்தில் தலையிலும், காலிலும் பலத்த காயம் ஏற்பட்டது. மருத்துவர்கள் ஓடக் கூடாது எனக் கூறினார்கள். அதன்பின் குணமடைந்து யோகா செய்ய ஆரம்பித்தேன். 2014ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் புதுச்சேரியில் மாரத்தான் ஓடத்தொடங்கி இன்று 131ஆவது மாரத்தானை நிறைவுசெய்துள்ளேன்.
ஆசிய சாதனை
ஆஸ்திரேலியா, லண்டன், இத்தாலி, நார்வே போன்ற வெளிநாடுகளிலும், இந்தியாவில் 20 மாநிலங்களிலும் மாரத்தான் ஓடியிருக்கிறேன். இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் மாரத்தான் ஓட வேண்டும் என்பது எனது இலக்கு. கரோனா ஊரடங்கில் பொதுவெளியில் ஓட முடியாத நிலையில் வீட்டின் மாடியில் எட்டு வடிவத்தில் நான்கு மணி நேரம் 8 நிமிடம் 18 விநாடிகளில் இடைவிடாது ஓடி ஆசிய சாதனைப் படைத்தேன்.
என்னுடைய மாரத்தான் ஓட்டம் குறித்து சமூக வலைதளங்களில் பதிவிடுவேன். இதன்மூலம் பல இளைஞர்கள் மாரத்தான் ஓடத் தொடங்கியுள்ளனர் என்று மகிழ்ச்சி தெரிவித்தார். ட்ரீம் ரன்னர்ஸ் 10 ஆண்டுகளாக மிகச்சிறப்பாக மாரத்தான் போட்டி நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.
இதன்மூலம் கிடைக்கும் தொகையை ஏழைகளுக்கு உதவுவதற்காகப் பயன்படுத்துகிறார்கள். இந்த மாரத்தான் இம்மாதம் அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கி வரும் 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: கரோனா நிவாரணம்: ரூ. 50ஆயிரம் வழங்கும் பணியை தொடங்கிய முதலமைச்சர்