சென்னை: தமிழ்நாட்டில் இன்று (ஜூன் 12) ஒரு லட்சம் இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இதனை ஆவடியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் பால்வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் மாவட்ட ஆட்சியர் ஆல்பீ ஜான் வர்கீஸ், ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டம் சார்பில் நடைபெற்று வரும் மூன்று நாள்கள் உணவுத்திருவிழா நிகழ்ச்சியின் ஒரு பகுதியான உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த வாக்கத்தான் போட்டியை கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். பின்னர், அமைச்சர்கள், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ், அரசு அலுவலர்கள், பொதுமக்கள், தன்னார்வலர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் சுமார் 5 கி.மீ., நடந்தே பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன், “பள்ளிகளைப் பொறுத்தவரை ஏற்கெனவே முகக்கவசங்கள் அணிந்து வருவது, சமூக இடைவெளியைக் கடைபிடிப்பது என்கின்ற எல்லா விதிமுறைகளும் இன்னமும் அப்படியே நடைமுறையில் இருக்கிறது. பல்வேறு மாநிலங்களில் ஏற்கெனவே இந்த நடைமுறைகள் விலக்கிக்கொள்ளப்பட்டது. ஆனால், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எந்த விதிமுறையும் விலக்கிக்கொள்ளப்படவில்லை.
அப்போது கரோனா எண்ணிக்கை குறைந்து இருந்தது. இப்போது எண்ணிக்கை கூடுதலாகி கொண்டு இருக்கின்ற காரணத்தினால் அந்த பழைய விதிமுறைகள் எல்லாமே அமலில் இருக்கும். நிச்சயம் பள்ளிக்கல்வித்துறையும் இதை தீவிரமாக கண்காணிப்பர். பள்ளி நிர்வாகங்கள் மூலம் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்ட அளவிலான கல்வி அலுவலர்களுக்கு மாநில அளவிலான கல்வி அலுவலர்களின் மூலம் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
தொடர் கண்காணிப்பில் பள்ளிக் கல்வித்துறை இருந்து கொண்டிருக்கிறது. மருத்துவத்துறை கண்காணிப்பு குழுவும் இருக்கிறது; இவர்களும் தொடர்ந்து கண்காணிப்பர். கரோனா அதிகரித்துக்கொண்டு இருப்பதைப் பார்க்கிறபோது கொஞ்சம் அச்சமாகவும் இருக்கிறது. சென்னையைப் பொறுத்தவரை 22 இடங்களில் 2,3 என்கின்ற அளவிலான எண்ணிக்கை கொண்டவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தொடர் கண்காணிப்பில் இருக்கிறார்கள்.
மாவட்டங்களில் 12 நாள்கள் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருக்கிறோம். எனவே, கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் முதலமைச்சர் ஸ்டாலின், அவருடைய வழிகாட்டுதலின்படி தீவிரமாக செய்து கொண்டிருக்கிறோம். தற்போது கட்டுப்பாடுகளுக்கு அவசியமில்லை. என்றாலும் கூட நாம முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்; அதற்குதான் இது போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. முகக்கவசங்களை அணிய வேண்டும் என்பதற்காகத்தான் விழிப்புணர்வு. தடுப்பூசி கையிருப்பு 98 லட்சம் உள்ளன. கவலைப்பட வேண்டியதில்லை. என்றாலும் தேவைப்பட்டால் உடனடியாக தடுப்பூசி வழங்கப்படும். தடுப்பூசியைப் பொறுத்தவரை கவலை இல்லை” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: "இளம் ஐஏஎஸ்களுக்கு, பி.சபாநாயகம் ஒரு பல்கலைக்கழகம்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்