சென்னை: பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்த வேண்டும், தனியார் மயமாக்குதலை மத்திய அரசு நிறுத்த வேண்டும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திற்கு வழங்கப்படும் ஊதியத்தை உயர்த்த வேண்டும், இந்த திட்டத்தை நகரங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தொழிற்சங்கங்கள் அறிவித்த நாடு தழுவிய வேலை நிறுத்தம் தொடங்கியுள்ளது.
சைதாப்பேட்டை சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஸ்மார்ட் வகுப்புகள் மற்றும் வருமுன் காப்போம் மருத்துவ திட்டத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் தொடக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "தனியார் தொண்டு நிறுவன உதவியுடன் 12.39 லட்சம் ரூபாயில் சைதாப்பேட்டையில் 3 ஸ்மார்ட் வகுப்புகள் திறக்கப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளிகளில் வசதிகள்
தனியார் பள்ளிகளை விட அரசுப் பள்ளிகளில் வசதிகள் மற்றும் கற்பிக்கும் தன்மை அதிகமாக உள்ளது. மாநகராட்சி பள்ளி கட்டமைப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கு தொண்டு நிறுவனங்கள் உறுதுணையாக உள்ளது. மேலும் 'வருமுன் காப்போம் திட்டம்' என்பது முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கொண்டு வந்த திட்டம்.
இந்த திட்டம் 2011க்கு பிறகு செயல்பாட்டில் இல்லை, தற்போது மீண்டும் 'கலைஞர் வருமுன் காப்போம் திட்டம்' என்று நடைமுறைக்கு கொண்டு வந்த சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த திட்டம் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. ஆயிரம் முகாம் நடத்த மட்டுமே திட்டமிட்டு இருந்த தற்போது வரை 1035 முகாம்கள் நடைபெற்று முடிந்துள்ளது.
இதன் மூலம் 7.38 லட்சம் பேர் பயனடைந்து உள்ளனர். சென்னையில் ஒரு மண்டலத்துக்கு ஒரு முகம் என 15 முகாம் ஒதுக்கப்பட்டது. தற்போது 15வது முகாம் நடைபெற்று வருகிறது. இதுவரை 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயன் அடைந்துள்ளனர்.
கரோனா தொற்று
சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் கரோனா தொற்று சற்று அதிகமாக உள்ளது. குறைப்பதற்கான நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், குறைந்த எண்ணிக்கையிலான பேருந்துகள் இயக்கப்பட்டு வருவது, இந்த போராட்டம் தொழிற்சங்கங்கள் எடுத்த முடிவு. பயணிகளுக்கு பாதிப்பு இல்லாத வகையில் தான் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது" என தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: தனியார் பள்ளி வாகன சக்கரத்தில் சிக்கி மாணவன் உயிரிழப்பு