சென்னை: சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தில், ஒப்பந்ததாரர் செவிலியர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டது குறித்து சட்டப்பேரவை உறுப்பினர்கள் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். இதற்குப் பதிலளித்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்த்துரை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தமிழ்நாடு முழுவதும் 47 ஆயிரத்து 938 செவிலியர் பணியாற்றி வருகின்றனர்.
அதில் 12ஆயிரத்து 787 பேர் ஒப்பந்த செவிலியர். இந்த ஒப்பந்த செவிலியர் 2016 - 17 மற்றும் 2020ஆம் ஆண்டு காலகட்டங்களில் வந்தவர்கள். ஒப்பந்த செவிலியருக்கு பணி பாதிப்பு இருக்கக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு ஒப்பந்த காலம் முடிந்தவுடன் அவர்களை மீண்டும் மாவட்ட மருத்துவ சங்கம் மூலம் 14ஆயிரம் ரூபாய் மூலம் 18ஆயிரம் ரூபாய் சம்பளம் உயர்த்தி அவர்களுடைய சொந்த மாவட்டங்களில் பணி அமர்த்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
499 செவிலியர் காலிப்பணியிடங்கள் தற்போது உள்ளன. அந்த பணியிடங்களில் ஒப்பந்த செவிலியரையே நிரப்பிட வேண்டும் என கோரிக்கை பெறப்பட்டுள்ளது. வருகிற அக்.13ஆம் தேதி கலந்தாய்வு மூலம் மூப்பு நிலை மற்றும் சுழற்சி மூலம் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு எம்ஆர்பி மூலம் ஒப்பந்த செவிலியரை கால முறை ஊதியத்தில் பணியமர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றார்.
இதையும் படிங்க: விபத்தில் சிக்கிய பெண்ணுக்கு முதலுதவி அளித்த முன்னாள் அமைச்சர்..! சமூக வலைத்தளங்களில் குவியும் பாராட்டு..!