சென்னை: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழ்நாடு அரசு, உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006-இன் படி, கடந்த 2013 மே 23ஆம் தேதி முதல் புகையிலை மற்றும் நிகோட்டினை சேர்மமாகக் கொண்ட உணவுப் பொருட்கள் மீதான தடையை அமல்படுத்தியது.
இந்த தடையை வருடந்தோறும் நீட்டித்தும் வருகிறது. அதனடிப்படையில், 2023 மே 23ஆம் தேதி முதல் இத்தடையாணையை ஓராண்டு நீட்டித்து, உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், உணவு பாதுகாப்புத் துறையின் மூலம் புகையிலை மற்றும் நிகோடினை சேர்மமாகக் கொண்ட உணவுப் பொருட்களை தயாரித்தல், சேமித்து வைத்தல், விநியோகித்தல், வாகனங்களில் எடுத்துச் செல்லுதல், விற்பனை செய்தல் போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா உள்ளிட்ட பொருட்கள் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் விற்பனை செய்வதை குறித்த தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் வகையில், உணவு பாதுகாப்பு துறையினர் காவல் துறையுடன் இணைந்து ஆய்வு மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில், சென்னை மாநகராட்சி பகுதிகளில் நியமன அலுவலர், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மற்றும் காவல் துறை அலுவலர்களைக் கொண்டு 19 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இது போன்று, தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநகராட்சிகள், மாவட்ட அளவில் நியமன அலுவலர் மற்றும் நகராட்சிகள், வட்டார அளவில் பணிபுரியும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மற்றும் காவல் துறையினருடன் இணைந்து தமிழ்நாடு முழுவதும் 247 குழுக்கள் அமைக்கப்பட்டு, தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா உள்ளிட்ட பொருட்கள் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் விற்பனை செய்யப்படுவது குறித்து ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களைச் சுற்றியுள்ள உணவு வணிக நிறுவனங்கள், கடைகள், வாகனங்கள் ஆகியவற்றில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். ஒரு வாரத்திற்கு 3 நாட்கள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா உள்ளிட்ட பொருட்கள் கண்டறியப்பட்டால், உடனடியாக பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படும்.
ஒரு முறைக்கு மேல் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்யும் குற்றச் செயலில் ஈடுபடும் உணவு வணிகர்களின் உரிமம், பதிவுச் சான்றினை உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம் 2006 மற்றும் ஒழுங்குமுறைகள் 2011-இன்படி ரத்து செய்யப்படும். இதன் தொடர்ச்சியாக, அவசர தடையாணை உத்தரவினை பெற்று தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்த கடையினை பூட்டி சீல் வைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும், தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்தவர்களின் குற்ற வழக்கு விவரத்தினை காவல் துறையினர், உணவு பாதுகாப்புத் துறையினருக்கு வழங்க வேண்டும். அதனடிப்படையில், மீண்டும் மீண்டும் இக்குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
கடந்த 2023 அக்டோபர் 29ஆம் தேதி முதல் உணவு பாதுகாப்புத் துறையினர் காவல் துறையுடன் இணைந்து தமிழ்நாடு முழுவதும் உள்ள 3 ஆயிரத்து 211 கடைகளில் ஆய்வு மேற்கொண்டதில், 173 கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா உள்ளிட்ட பொருட்கள் கண்டறியப்பட்டு, 428 கிலோ பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் தோராய மதிப்பு ரூ.4 லட்சத்து 25 ஆயிரத்து 965 ஆகும். கடந்த 12 நாட்களில் மட்டும் 88 கடைகளின் உரிமம், பதிவுச் சான்று ரத்து செய்யப்பட்டு பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது.
மேலும், 108 சிறு குற்றச் செயல்கள் கண்டறியப்பட்டு ரூ.5 லட்சத்து 63 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு வருடங்களில் மட்டும் 3 லட்சத்து 51 ஆயிரத்து 186 கடைகளில் ஆய்வு செய்யப்பட்டு, 12 ஆயிரத்து 240 கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா உள்ளிட்ட பொருட்கள் கண்டறியப்பட்டு, 91 ஆயிரத்து 959 கிலோ பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் தோராய மதிப்பு ரூ.6 கோடியே 16 லட்சத்து 43 ஆயிரத்து 395 ஆகும். அதில், சுமார் 345 கடைகளின் உரிமம், பதிவுச் சான்று ரத்து செய்யப்பட்டு, பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, 261 கடைகள் அவசர தடையாணை உத்தரவு மூலம் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும், 6 ஆயிரத்து 568 சிறு குற்றச் செயல்கள் கண்டறியப்பட்டு, ரூ.3 கோடியே 56 லட்சத்து 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதில் கூல் லிப் (Cool Lip) என்னும் புகையிலை மட்டும் 3 ஆயிரத்து 707 கிலோ பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுவது குறித்த புகார்களை TN Food Safety Consumer App வாயிலாகவும் 9444042322 என்னும் எண்ணிற்கு வாட்ஸ்அப் வாயிலாகவும் பதிவு செய்யலாம். அதனடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சென்னை விமான நிலைய கழிவறையில் 1.5 கிலோ தங்கப் பசை பறிமுதல் - ஒப்பந்த ஊழியர் கைது!