சென்னை: அண்ணாநகர், புறநகர் அரசு மருத்துவமனையில் 2 எண்ணிக்கையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் கொள்கலனை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, "திமுக அரசு பொறுப்பேற்றதற்குப் பிறகு, பல்வேறு தனியார் தொழில் நிறுவனங்கள் கரோனா பேரிடரில் உதவி செய்து வருகின்றன.
ரெனால்ட் நிசான் நிறுவனம் ரூ.5 கோடி மதிப்புள்ள உதவிகளை செய்ய உள்ளது. ஏற்கெனவே ரூ.1 கோடி ரூபாயை கரோனா பேரிடர் நிதியாக வழங்கியுள்ளது.
ஆக்சிஜன் உற்பத்தி
அதனை அண்ணா நகர், கலைஞர் நகர், தண்டையார்பேட்டை, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, திருப்பூர், நாமக்கல், ராமநாதபுரம், கள்ளக்குறிச்சி ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் கொள்கலன் தயாரிக்கும் பணிகளுக்கு செலவிட உள்ளது.
படுக்கை வசதி
திமுக ஆட்சி பொறுப்பேற்றதற்கு முன்பு ஆக்சிஜன் உற்பத்தி என்பது 270 கிலோ லிட்டர் என்கிற அளவில் இருந்தது. மே 7-க்கு பிறகு 744.67 கிலோ லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் ஆலைகள் புதியதாக தோற்றுவிக்கப்பட்டுள்ளன.
ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலை
தமிழ்நாட்டில் பி.எம். கேர்ஸ் நிதி பங்களிப்பில் 70 ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள் நிறுவப்பட்டுள்ளன. மேலும் சி.எஸ்.ஆர் நிதி பங்களிப்பின்கீழ் அரசு மருத்துவமனைகளில் 77 பிஎஸ்ஏ ஆலைகள், தனியார் மருத்துவமனைகளில் 61 பிஎஸ்ஏ ஆலைகள் நிறுவப்பட்டுள்ளன.
தமிழ்நாடு தன்னிறைவு
ரயில்வே வாரிய மருத்துவமனைகளில் 4 பிஎஸ்ஏ ஆலைகள், என்எல்சி மருத்துவமனைகளில் 10 ஆக்சிஜன் ஆலைகள் நிறுவப்பட்டுள்ளன.
ஆக்சிஜன் வசதி என்பது மிகப்பெரிய அளவில் தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆக்சிஜன் செறிவூட்டிகள் 11,651, பி-டைப் 12,457, டி-டைப் 9,450 என கையிருப்பில் உள்ளன. ஆக்சிஜன் வசதியைப் பொறுத்தமட்டில் தமிழ்நாடு தன்னிறைவு பெற்று விளங்குகிறது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஒமைக்ரான் தொற்று குறித்து மருத்துவர் பரந்தாமன் விளக்கம்