சென்னை: தேனாம்பேட்டையில் உள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறை இயக்குநரகத்தில் கர்ப்பகால நீரிழிவு நோய் செயல்பாட்டு வழிகாட்டி கையேட்டை வெளியிட்டு, மாவட்ட தாய்சேய் நல அலுவலர்கள் மற்றும் பகுதி சுகாதார செவிலியர்களுக்கான லேப்டாப்பை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “பகுதி சுகாதார செவிலியர்கள் மற்றும் மாவட்ட தாய்சேய் நல அலுவலர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதன்படி 1,807 ஊரக சுகாதார நிலையங்களுக்கும் மற்றும் 42 மாவட்ட தாய்சேய் நல அலுவலர்களுக்கும் தலா ஒரு லேப்டாப் என 1,852 அலுவலர்களுக்கு ரூ.15.92 கோடி மதிப்பீட்டில் வழங்குவதற்கான திட்டத்தை தொடங்கி வைத்துள்ளோம்.
இதன் மூலம் தாய்சேய் நல பாதுகாப்பு அலுவலர்கள் பிரசவத்தின் போது தாய் மற்றும் குழந்தைகளின் நலனினை கண்காணித்து எடை, BP, ஹீமோகுளோபின் அளவினை பதிவிடுவதற்கு பெரிய அளவில் பயன்படும். மேலும், பகுதி சுகாதார செவிலியர்கள், கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் ANM வழங்கும் அறிக்கைகளை ஆராய்ந்து பதிவேற்றுவதற்கும், கர்ப்பகால சேவை, பிரசவ கால சேவை, பிரசவ பிற்கால கவனிப்பு, குழந்தைகள் நலம் மற்றும் இறப்பு குறியீடுகள் போன்றவற்றை PICMEயில் பதிவு செய்வதற்கும், ஆய்வு செய்வதற்கும் உறுதுணையாக இருக்கும்.
கர்ப்பக்கால நீரிழிவு நோய் பற்றிய புதிய வழிகாட்டி நெறிமுறைகளுக்கான புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. இதில் கர்ப்பகால கர்ப்பிணித் தாய்மார்களுக்கு நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஏற்படக்கூடிய சிக்கல்கள், கர்ப்பகால நீரிழிவு நோயினால் சிசுவிற்கு ஏற்படக்கூடிய சிக்கல்கள் போன்ற பல்வேறு தகவல்களை ஆராய்ந்து எதிர்கொள்வதற்கு போன்ற மருத்துவச் சேவைகள் பல தகவல்கள் இந்த வழிகாட்டு நெறிமுறைகளில் உள்ளடக்கியிருக்கிறது.
கர்ப்பகால நீரிழிவு நோய் கருவுற்ற தாய்மார்களின் உடலில் ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்க செய்கிறது. உலகளவில் கர்ப்பிணித் தாய்மார்களில் கர்ப்பகால நீரிழிவு நோயினால் பாதிக்கப்படுபவர்களின் விகிதம் 7 சதவீதம் முதல் 10 சதவீதம் ஆகும்.
தமிழ்நாட்டினைப் பொறுத்தவரை ஆண்டொன்றிற்கு 9.25 லட்சம் கர்ப்பிணித் தாய்மார்கள் இருக்கின்றனர். அவர்களில் 70,000 முதல் 1,00,000 பேர் வரை நீரிழிவு நோயினால் பாதிக்கப்படுகிறார்கள். ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ள கையேட்டை நோயாளர்களும் தெரிந்து கொள்ளும் வகையில் தமிழில் மிக விரைவில் வெளியிடப்படும்.
சீனாவில் ஒரு புதிய வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாக சொல்லப்பட்டு வருகிறது. அந்த வைரஸ் காய்ச்சல் குழந்தைகளை அதிகமாக பாதிப்பதாக சொல்லப்படுகிறது. உலக சுகாதார நிறுவனம் ஏற்கனவே எச்சரிக்கை வெளியிட்டிருக்கிறது. பொது சுகாதாரத்துறை சார்பாக காய்ச்சல் ஏற்பட்டிருக்கும் குழந்தைகளை மிக கவனமாக கூர்ந்து ஆராய்ந்து வருகின்றனர். எனவே, புதிய வைரஸ் தாக்குதல் தமிழ்நாட்டில் இதுவரை இல்லை.
மழைக்கால நோய்கள் என்கின்ற வகையில் இன்புளுயன்சா, டெங்கு, மலேரியா போன்ற பல்வேறு நோய் பாதிப்புகள் ஏற்படுகிறது. எனவே தான் இத்தகைய நோய் பாதிப்புகளை தடுப்பதற்கு வாரந்தோறும் சிறப்பு மருத்துவ முகாம்கள் அறிவிக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன.
எனவே, வாரந்தோறும் நடத்தப்பட்ட மருத்துவ சிறப்பு முகாம்களின் எண்ணிக்கை 10,576. இதில் பயன்பெற்ற பயனாளிகள் 5,21,853. இதில் காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்கள் என்று கண்டறியப்பட்டவர்கள் 1,791 பேர், சளி மற்றும் காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்கள் 917 பேர். இவர்கள் அனைவருக்கும் தேவையான மருத்துவ சிகிச்சை தொடர்ந்து வழங்கப்பட்டிருக்கிறது.
இந்த மாதம் டிசம்பர் வரை இன்னும் 5 வாரங்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது. கொசு என்பது உலகளாவிய பிரச்சனை. தற்போது பூச்சியியல் துறை சார்பில் நிறைய ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பூச்சியியல் வல்லுநர்கள் தொடர்ச்சியாக பல்வேறு பணிகளை செய்து வருகின்றனர். கொசு என்பது தமிழ்நாட்டிலோ அல்லது சென்னையிலோ மட்டுமல்ல. இது உலகளாவிய பிரச்சினை.
கொசு உற்பத்தியை தடுப்பதற்கு கொசு பெருக்கத்தை தடுப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொசு மருந்து அடிப்பது, புகை மருந்து அடிப்பது போன்ற அனைத்து பணிகளும் நடைபெற்று வருகிறது.
மழைக்காலங்களில் டெங்கு போன்ற நோய்கள் அதிகரிப்பதன் காரணம் நீர்த்தேக்கம் அதிகமாக இருப்பதால் தான். எனவே பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளை உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொண்டு வருகின்றது. எனவே ICMR போன்ற ஆராய்ச்சி அமைப்புகளும் ஆராய்ச்சிகள் குறித்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: "போலியான வருத்தத்திற்கு உண்மையை பலி கொடுக்க முடியாது" - பருத்திவீரன் பட பிரச்சினையை மீண்டும் கிளறிய சசிகுமார்!