சென்னை: சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள தீக்காய சிகிச்சைப் பிரிவை, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (நவ.12) ஆய்வு செய்தார். இதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'தமிழகத்தில் 95 மருத்துவமனைகளில் 750 படுக்கை அமைப்புகளுடன் சிறப்பு தீக்காய சிகிச்சைப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.
இரண்டு நாட்களாக தீபாவளி பண்டிகையையொட்டி, தமிழகத்தில் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையைத் தவிர்த்து, வேறு எங்கேயும் யாருக்கும் பட்டாசுகள் வெடிப்பின்போது பாதிப்பு ஏற்படவில்லை” என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “தனியார் மருத்துவமனைகளிலும் விவரங்கள் கேட்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் மட்டும் நெமிலிச்சேரி பகுதியைச் சேர்ந்த ஒருவர், ஆவடியைச் சேர்ந்த ஒருவர் உள்பட என இருவர் பட்டாசு வெடித்து இரண்டு சதவீதம் தீக்காயம் ஏற்பட்டு, மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
அந்த இருவருக்கும் கையில் காயங்கள் ஏற்பட்டுள்ளன. ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். மற்றொருவருக்கும் அறுவை சிகிச்சை நடைபெற்று உள்ளது. இருவருமே தற்போது நலமாக உள்ளனர்' என தெரிவித்தார்.
பட்டாசுகள் வெடிக்கும்போது இதை பின்பற்றுங்கள்: சக்தி வாய்ந்த பட்டாசுகளை சிறியவர்கள் கைகளில் கிடைக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். பட்டாசு வெடிக்கும்போது, கட்டாயம் செருப்பு அணிந்திருக்க வேண்டும். பட்டாசுகளை தீக்குச்சிகளைக் கொண்டு பற்ற வைக்காமல், அதற்காக விற்கும் நீண்ட ஊதுவத்திகளைப் பயன்படுத்துங்கள்.
பெரியோர் கண்காணிப்பிலேயே குழந்தைகளை பட்டாசு வெடிக்க அனுமதியுங்கள். பட்டாசு வெடிக்கும் இடத்திற்கு அருகில், ஒரு வாளியில் எப்போதும் தண்ணீர் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். நைலான் உள்ளிட்ட ஆடைகளை பட்டாசு வெடிக்கும்போது தவிர்க்கவும்.
கைகளில் பட்டாசுகளை பிடித்துக் கொண்டு வெடிப்பது மிகவும் ஆபத்தானது. வெடிக்காமல் போன பட்டாசுகளின் அருகில் செல்லாமல் இருப்பது நல்லது. அவை எப்போது வேண்டுமானாலும் வெடிக்க வாய்ப்புள்ளதால், அவற்றின் மீது தண்ணீர் ஊற்றி அணைக்க வேண்டும். குடிசைகள், பெட்ரோல் பங்குகள், எளிதில் தீப்பற்றும் பொருட்கள் உள்ள பகுதிகளில் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என்பதை மறவாதீர்கள்.
இதையும் படிங்க: தீபாவளி பண்டிகை; வேலூரில் விபத்து ஏற்படாத வகையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு!