சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தொற்றுத் தடுப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மக்கள், சட்டப்பேரவை உறுப்பினர்களுடனான ஆலோசனைக் கூட்டம் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் தலைமையில் ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி, வணிக வரித்துறை முதன்மைச் செயலாளர் ஏ.சித்திக், மக்களவை உறுப்பினர்கள் தயாநிதி மாறன், டாக்டர் கலாநிதி வீராசாமி, தமிழச்சி தங்கப்பாண்டியன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "சென்னை மாநகராட்சியின் சார்பில் ஏற்படுத்தப்பட்ட கார் ஆம்புலன்ஸ் சேவை பல்வேறு தரப்பினரிடமும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதுவரை இந்த கார் ஆம்புலன்ஸ் சேவைகளைப் பயன்படுத்தி 12,293 நபர்கள் பயனடைந்துள்ளனர்.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய 1,283 படுக்கைகள் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, அதில் 773 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. சென்னை வர்த்தக மையத்தில் கூடுதலாக 500 ஆக்ஸிஜன் படுக்கை வசதிகள் விரைந்து பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்" என்றார்.
தொடர்ந்து கூட்டத்தில் பேசிய அமைச்சர் சேகர்பாபு, "ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளிலும் கள ஆய்வு மேற்கொண்டு கோவிட் சிகிச்சை மையம், முதற்கட்ட உடற்பரிசோதனை மையம் (Screening Center), காய்ச்சல் கண்டறியும் முகாம், ஆர்டிபிசிஆர் பரிசோதனை மையங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முதற்கட்ட உடற்பரிசோதனை மையங்களில் (Screening Center) தேவையான பரிசோதனை உபகரணங்கள் இருப்பதை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும். முழு ஊரடங்கில் வணிகர் சங்கங்களுடன் மாநகராட்சி இணைந்து, சுமார் 3,000க்கும் மேற்பட்ட நடமாடும் வாகனங்களின் மூலம் காய்கனிகள் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மாநகராட்சியின் 200 வார்டுகளிலும் நாள்தோறும் நடமாடும் வாகனங்களில் காய்கனிகள் கிடைப்பதை சம்பந்தப்பட்ட மண்டல வருவாய்துறை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும். மக்கள் தொகை அடர்த்தியாகவுள்ள பகுதிகளில் தேவைக்கேற்ப நடமாடும் வாகனங்களின் எண்ணிக்கையை அலுவலர்கள் அதிகப்படுத்த வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: அறநிலையத்துறையில் ஸ்டாலினின் ஆஹா திட்டம்