சென்னை: தடுப்பூசி போடும் பணியில் முன்கள பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.
கிண்டி கிங்ஸ் மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், புதிதாக அமைக்கப்பட்டுள்ள 104 ஆக்ஸிஜன் செறிவூட்டிப் படுக்கைகளை மக்கள் பயன்பாட்டிற்காகத் தொடங்கி வைத்தார். பின்னர் தனியார் மருத்துவமனையில் உள்ள பணியாளர்களுக்கு தனியார் அறக்கட்டளை சார்பில் நிவாரண பொருட்களை வழங்கினார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறும்போது, “கிண்டி கரோனா மருத்துவமனையில் 300 ஆக்ஸிஜன் படுக்கைகளும், 350 சாதாரண படுக்கைகளும் இருந்தன. தற்போது 104 ஆக்ஸிஜன் படுக்கைகள் கூடுதலாக கொண்டு வரப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் வேகமாகப் பரவி வரும் கரோனா தொற்றைத் தடுக்க தீவிரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சென்னையைப் பொறுத்தவரை கரோனா தனிமைப்படுத்தும் மையங்களில், 6,000 படுக்கைகள் காலியாக உள்ளன. மேலும், பெரியார் திடலில் ஒரு மருத்துவமனை உருவாக்கப்பட்டு வருகிறது. 21 இடங்களில் பரிசோதனை மையங்கள் உள்ளன. பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நேரடியாக மருத்துவமனைக்கு செல்லாமல் பரிசோதனை மையங்கள் சென்று எந்த மருத்துவமனை செல்வது என்று கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டிலுள்ள 890 மருத்துவமனைகளிலும் அரசு காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது என பெயர் பலகை வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு எவ்வளவு கட்டணம் வசூலிக்க பட வேண்டும் என அரசு கூறியுள்ளது. அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தைவிட கூடுதலாக வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழ்நாட்டில் தடுப்பூசி எடுத்துக்கொள்வோரின் எண்ணிக்கை குறையவில்லை. 18 வயதிற்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கி விட்டது. குறிப்பாக, வெளியில் செல்லும் முன்களப் பணியாளர்களுக்கு முன்னுரிமை கொடுத்து, இந்த ஒரு வாரத்திற்குள் 11 லட்சம் தடுப்பூசி போடப்படும். அதேசமயம் கரோனா தடுப்பு மருந்து ஒதுக்கீடு செய்வதில் தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு பாரபட்சம் காட்டுகிறது என்பது உண்மை” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: காய் கனிகள் வாங்க... இந்த எண்ணுக்கு அழையுங்கள்!