சென்னை: கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்த விவகாரத்தில் மருத்துவர்களை கைது செய்யக்கூடாது என வலியுறுத்தி, அரசு மருத்துவர்கள் சங்கத்தினர் போராட்டம் அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து, அவர்களுடன் பேசிக்கொண்டு இருக்கிறோம் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சைதாப்பேட்டை அப்பாவு நகர் மற்றும் சுப்பு பிள்ளை தோட்டம் திட்டப் பகுதியில் மறுகுடியமர்வு செய்ய தற்காலிக ஒதுக்கீட்டில் குடும்பத்தார்களுக்கு ஆணையை இன்று (நவ.20) வழங்கினார்.
அப்போது நிகழ்ச்சி மேடையில் பேசிய அவர், 'தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி வீடுகள் கட்டி வழங்கினார். நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் பழுதடைந்த வீடுகளை இடித்து விட்டு, மீண்டும் 18 மாதங்கள் கடந்த பின்னர், மீண்டும் புதிய வீடுகள் வழங்கப்பட உள்ளது. வீடுகள் 270 சதுர அடி மட்டுமே இருந்த நிலையில், இவர்களுக்கு 420 சதுர அடி அளவில் வீடுகள் கட்டித் தரப்படும்.
அப்பாவு நகர், சுப்பு பிள்ளைத்தோட்டப் பகுதிகளில் 290 குடும்பங்கள் உள்ளன. இங்கு 420 சதுர அடி வீட்டிற்கு ரூ.13 லட்சம் செலவில் கட்டப்பட உள்ளது. அதில் ரூ.1.50 லட்சம் மத்திய அரசும், ரூ.1.50 லட்சம் பயனர்களும், ரூ.10 லட்சம் தமிழ்நாடு அரசும் வழங்குகிறது. வாடகை நிவாரணமாக 24 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட உள்ளது. ஏற்கெனவே, ரூ.4.50 லட்சம் கட்ட வேண்டும் என்பது ரூ.3 லட்சமாக குறைக்கப்பட்டுள்ளது' என்றார்.
பேச்சுவார்த்தையில் மருத்துவர்கள் போராட்டம்: அதன் பின் செய்தியாளர்களிடையே பேசிய அவர், 'மருத்துவர்கள் போராட்டம் நடத்த வேண்டாம் என நினைக்கிறோம். பிரியா குடும்பத்திற்கு மருத்துவர்களால் ஏற்பட்ட பாதிப்பு; வலி இன்னும் ஆறவில்லை. மருத்துவர்களுடன் பேசிக்கொண்டு இருக்கிறோம். தமிழ்நாட்டில் ஒவ்வொரு அறுவை சிகிச்சையில் மேற்கொள்ளப்படும் உபகரணங்கள், விதிகள் குறித்தும் தமிழ்நாடு முழுவதும் உள்ள அறுவை சிகிச்சை மருத்துவர்களுடன் வரும் 23ஆம் தேதி மிக முக்கிய ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது. இனிமேல் எதிர்காலத்தில், இதுபோன்ற நிகழ்வு நடைபெறாமல் இருப்பதற்கான நடவடிக்கையை அரசு மேற்காெண்டு வருகிறது.
சட்டம்தான் முடிவு செய்யும்: கால்பந்து வீராங்கனை பிரியாவுக்கு மருத்துவர்கள் செய்த அறுவை சிகிச்சையில் தவறில்லை. compression band என்று சொல்லக்கூடிய கட்டுப்போடப்பட்டது. அதை உடனடியாக குறிப்பிட்ட நேரத்திற்குள் அகற்றவேண்டும். ஆனால், அப்படி செய்யாமல் அலட்சியமாக இருந்திருக்கின்றனர். அதற்கான நடவடிக்கை தான் எடுக்கப்பட்டு, உடனடியாக சஸ்பெண்ட் அளிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் இது கொலை குற்றமா? என்பதை எல்லாம் சட்டம்தான் முடிவு செய்யவேண்டும். அதற்கான கொலைக்குற்றமா? என்பதை காவல் துறை முடிவு செய்யும்' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கூட்டுறவுத்துறையில் விரைவில் சம்பள உயர்வு - அமைச்சர் ஐ.பெரியசாமி