தென்காசி: தென்காசி மாவட்டத்தில் பல்வேறு அரசு மருத்துவமனைகளுக்கான கட்டடங்களை திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நீட் விலக்கினை பொறுத்தவரை 100 சதவிகிதம் பெற்றே தீர வேண்டும் என்பது தமிழ்நாடு முதலமைச்சரின் எண்ணம். ஒட்டு மொத்த தமிழ் மக்களின் எண்ணத்தினை தான் தமிழ்நாடு முதலமைச்சர் தேர்தல் வாக்குறுதியில் பிரதிபலித்தார்.
தேர்தல் அறிக்கையில் பிரதிபலித்தது மட்டும் அல்லாமல் ஆட்சியில் வந்தவுடன் நீதியரசர் ராஜன் தலைமையில் குழு அமைத்து அதிலிருந்து தீர்ப்பை பெற்று அதை சட்டமன்றத்தில் மசோதாவாக வைத்து அனைத்து கட்சிகளின் ஒப்புதலை பெற்று ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதனை ஆளுநர் இந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளித்து குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்திருக்க வேண்டும். ஆனால் அவர் அதனை செய்யாமல் காலம் கடத்தினார். மீண்டும் ஒரு மசோதாவினை சட்டமன்றத்தில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆளுநர் வேறு வழியே இல்லாமல் இந்த மசோதாவினை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தார்.
தற்போது குடியரசுத் தலைவர் உள்துறைக்கு அனுப்பி வைத்தார். உள்துறை அமைச்சகம் தமிழ் நாட்டில் உள்ள ஆயுஷ் துறை, கல்வித் துறை மற்றும் சுகாதாரத் துறை ஆகிய 3 துறைகளுக்கும் தொடர்ந்து இரண்டு, மூன்று முறை விளக்கம் எழுதி அனுப்பிக் கொண்டிருக்கின்றனர்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சட்ட வல்லுநர்களுடன் தொடர்ந்து பேசி, ஒவ்வொரு முறையும் கேட்கும் விளக்கங்களுக்கு சரியான பதிலை சட்ட ரீதியாக எழுதி அனுப்பிக் கொண்டிருக்கிறோம். கடந்த மாதம் கூட விளக்கம் கேட்டு கடிதம் வந்தது. அதற்கும் பதில் அனுப்பி இருக்கிறோம்.
நீட் தேர்விலிருந்து விலக்கு பெற வேண்டும் என்பது கூட இப்போது வரை உயிரோட்டமாக இருந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நேற்று (ஆகஸ்ட் 12ஆம் தேதி) தமிழ்நாடு ஆளுநர், ஆளுநர் மாளிகையில் நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களோடு கலந்து பேசுகின்ற நிகழ்வில், 'நீட் தேர்வு விலக்கிற்கு நான் கையெழுத்து போட மாட்டேன்' என்று சொல்கிறார்.
முதலில் ஆளுநர் இதிலிருந்து ஒரு விளக்கம் பெற வேண்டும். இனிமேல் நீட் தேர்வு விலக்கிற்கும், ஆளுநருக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. ஆளுநருக்கான ஒரே பணி என்பது சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்பது மட்டும்தான். இதோடு அவர் பணி முடிந்து விட்டது. அவருடைய ஒப்புதல் என்பது இனி அவசியமும் இல்லை.
இந்த நிலையில் நான் நீட் தேர்வு விலக்கிற்கு கையெடுத்து போட மாட்டேன் என்று சொல்வது இன்னும் மக்களை ஏமாற்றும் நிகழ்வு. இனி ஆளுநருக்கு, குடியரசுத் தலைவர் நீட் தேர்வு விலக்கு ஒப்புதல் தந்தால் இந்த ஒப்புதல் கடிதம் ஆளுநருக்கு தகவலாக மட்டுமே அனுப்பப்படுமே தவிர அவர்களிடத்தில் ஒப்புதலுக்கு அனுப்பப்படாது. எனவே இனிமேல் எந்த வகையிலும் ஆளுநருக்கும் நீட் தேர்வு விலக்கிற்கும் தொடர்பில்லை" என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: Sridevi 60th birthday: கூகுள் வெளியிட்ட டூடுளின் பின்னணி!