சென்னை: 'கோவிட் பேரிடரில் ரூ.5,000 தரும்படி பெருவாரியான கோரிக்கைக்கு செவிசாய்க்காமல், தன் ஆட்சியில் ரூ.1,000 தந்துவிட்டு, தன் அரசியலுக்காக ரூ.12,000 கேட்கும் உத்தமபுத்திரம் தான், எடப்பாடி பழனிச்சாமி' என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சைதாப்பேட்டை தொகுதிக்குட்பட்ட மசூதிகாலனி, மடுவின்கரை, கன்னிகாபுரம், ரேஸ்கோர்ஸ் சாலை ஆகிய பகுதிகளில் (Cyclone Michaung) மிக்ஜாம் புயலினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (டிச.11) நிவாரணப் பொருட்கள் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'ஒவ்வொரு வருடமும் வடகிழக்கு பருவமழை பெய்யும் அளவைவிட தற்போது, 49% கூடுதலாக மழை பெய்துள்ளது. இந்த அளவு அதிகபட்சமான மழை பெய்திருந்தும் கூட, மீட்புப்பணிகள் 2 நாட்களில் முடிவு பெற்றிருக்கிறது. இன்று 6வது நாளாக நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.
அந்தவகையில், இன்று வெள்ளம் பாதித்த அனைத்து பகுதிகளிலும் நிவாரணப் பணிகளை அந்தந்த தொகுதிகளுக்குட்பட்ட எம்எல்ஏக்கள், எம்பிக்கள், மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் என அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் சிறப்பான முறையில் மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, சைதாப்பேட்டை தொகுதியில் இன்று காலை தொடங்கி இரவு வரை நிவாரணப் பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.
வெள்ளம் பாதித்த மசூதிகாலனி, மடுவின்கரை, கன்னிகாபுரம், ரேஸ்கோர்ஸ் சாலை ஆகிய பகுதிகளில் மிக்ஜாம் புயலினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இதைத்தொடர்ந்து பிற்பகல் அப்பாவு நகர், காந்தி நகர், சுப்பு பிள்ளை தோட்டம் என பல்வேறு பகுதிகளில் நிவாரணப் பொருட்கள் தரப்பட உள்ளது. இதேபோல, நிவாரணப் பணிகள் தினந்தோறும் தொடர்ந்து செய்யப்பட்டு வருகிறது.
மழைநீர் வடிகால் பணிகள் குறித்து உயர்நீதிமன்ற நீதிபதிகள் மட்டுமல்ல; உச்சநீதிமன்றத்தில் இருக்கும் நீதிபதிகள் தலைமையில் குழு அமைத்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும், இதில் எந்த தவறும் இல்லை என நீர்வளத்துறையில் மிகச்சிறந்த நிபுணர்கள் நேற்றுக்கு சொல்லியிருக்கின்றனர். ரூ.4,000 கோடி செலவு செய்தும் மழைநீர் வடிகால்கள் மூலம் வடியவில்லை என்று சொல்கின்றனர். ரூ.40,000 கோடி செலவு செய்திருந்தாலும் தற்போது பெய்திருக்கும் மழைக்கு இரண்டு, மூன்று நாட்களுக்கு மழைநீர் வடியாது என்று மிகத் தெளிவாக சொல்லியிருக்கின்றனர்.
வேண்டுமெனில் உச்சநீதிமன்ற நீதிபதிகளே ஆய்வு செய்யலாம்: நான் பலமுறை சொல்லியிருப்பது, கடலில் மழைநீர் உள்வாங்காமல் இருந்ததால் பெரிய அளவிலான இடர்ப்பாடுகள் இருந்தது. சென்னை மாநகரம் மழைநீர் தேக்கத்தால் தத்ததளித்தது. 100% உள்வாங்க வேண்டிய மழைநீர் வெறும் 10% மட்டுமே உள்வாங்கியது. ஓரிரு நாட்கள் மழைநீர் தேக்கம் இருந்தது. மழைநீர் வடிகால்கள் மூலம்தான், இரண்டு நாட்களில் மழைநீர் வடிந்திருக்கிறது. இதனால், உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகளை வைத்துக்கூட ஆய்வு செய்து கொள்ளட்டும். இதில், எவ்வித தவறும் இல்லை' என்று கூறினார்.
மேலும் பேசிய அவர், 'எடப்பாடி கே.பழனிசாமி 12 ஆயிரம் கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார். ஜெயக்குமாருக்கு நான் நேற்று கூறும்போது, வெறும் கரண்டியை வைத்துக்கொண்டு வீசி விடலாம். அதில், சோறு போன்ற பொருட்களை வீசினால்தான் தெரியும். அதேபோல, எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்காலத்தில் தினந்தோறும் 1,000 பேர் கோவிட் (Covid19) பாதிப்புகளால் மரணமடைந்து வந்தனர். இதில் பெரிய அளவிலான மரணம், லட்சக்கணக்கானோருக்கு தொழில் பாதிப்பு ஏற்பட்டது.
அப்போதைய சூழலில் தற்போதைய முதலமைச்சர், அவர்கள் அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5,000 நிவாரணத் தொகையாக தரும்படி கூறினார். ஆனால், கடந்த ஆட்சியில் வெறும் ரூ.1,000 மட்டுமே நிவாரணத் தொகையாக வழங்கினார்.
அது எப்படிப்பட்ட பேரிடர், லட்சக்கணக்கானோர் இறந்த நிலையில், நிவாரணமாக வெறும் ரூ.1,000 மட்டுமே வழங்கிய உத்தமர் தான், எடப்பாடி பழனிசாமி. அத்தகைய உத்தமபுத்திரர்தான், தற்போது ரூ.12,000 வழங்க வேண்டும் என்று கூறுகிறார். இப்போதுதான் மக்கள் எடப்பாடி பழனிசாமியைப் பற்றி புரிந்து கொண்டிருக்கின்றனர்' என சாடினார்.
இதையும் படிங்க: "நல்லதோ, கெட்டதோ தமிழகத்தை திமுக அல்லது அதிமுக தான் ஆள வேண்டும்" - தமிமுன் அன்சாரி