சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மற்றும் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டம் நான்காம் ஆண்டு நிறைவு விழா மற்றும் உறுப்பு மாற்று தின நிகழ்ச்சி நேற்று (செப் 23) நடைபெற்றது.
இதனை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், “முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மறைந்த முதலமைச்சர் கருணாநிதியால் 23.7.2009 அன்று தொடங்கப்பட்டது.
இத்திட்டத்தில் 1.40 கோடி குடும்பங்கள் பயனாளிகளாக உள்ளனர். குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வரை காப்பீட்டுத் திட்டத்தில் அளிக்கப்படுகிறது. 11.1.2022 முதல் 5 ஆண்டுகளுக்கு ரூ.7,730 கோடி செலவில் இத்திட்டம் நீட்டிக்கப்பட்டு, பொதுத்துறை நிறுவனமான யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனம் இத்திட்டத்தினை தற்போது செயல்படுத்தி வருகிறது.
23.9.2018 அன்று முதல் மத்திய அரசின் பிரதான் மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டத்துடன், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் ஒருங்கிணைக்கப்பட்டு நான்காம் ஆண்டு நிறைவு விழா கொண்டாடப்படுகிறது. ஒருங்கிணைக்கப்பட்ட இத்திட்டத்தில் இப்போது 796 அரசு மருத்துவமனைகள் மற்றும் 937 தனியார் மருத்துவமனைகள் என மொத்தம் 1,733 மருத்துவமனைகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் 11 தொடர் சிகிச்சை முறைகள், 52 முழுமையான பரிசோதனைகள், 8 உயர் சிறப்பு சிகிச்சைகள் உட்பட 1,513 மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை முறைகள் அனுமதிக்கப்பட்டுள்ளன. செய்தித்துறையில் அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர்கள் மற்றும் பருவ இதழ் செய்தியாளர்களின் குடும்பங்களுக்கு எந்த வித வருமான உச்சவரம்பின்றி, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சுமார் 415 பேர் பயனாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
அரசு மன நல காப்பகத்தில் இந்த திட்டத்தில் 520 நபர்கள் இதுவரை பயனாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். பயனாளிகள் பதிவு மையம் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வந்தது. தற்போது புதிய பயனாளிகள் பதிவு அலுவலகங்கள் மேலும் 2 இடங்களில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48 திட்டம், தமிழ்நாடு முதலமைச்சரால் 18.12.2021 அன்று மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரியில் தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் இதுவரை 609 அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் 81 தேர்ந்தெடுக்கப்பட்ட சிகிச்சை முறைகளின் கீழ் ஒவ்வொரு நபருக்கும் ரூ.1 லட்சம் வரையிலான உத்தரவாத முறையில் சிகிச்சை வழங்கப்படுகிறது.
உறுப்பு மாற்று தினம் மறைந்த முதலமைச்சர் கருணாநிதி 5.9.2008 அன்று தமிழ்நாடு அரசின் மூளைச்சாவு உறுப்பு மாற்று சிகிச்சை திட்டத்தை தொடங்கி வைத்தார். 13.8.2021 ல் ‘விடியல்’ என்னும் முழு தானியங்கி செயல்முறை அறிமுகம் செய்யப்பட்டு, இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் இந்தியாவின் முதல் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.
தானியங்கி செயலியின் மூலம் மே 2022 முதல் தற்போது வரை 67 உறுப்பு கொடையாளர்களின் 224 உறுப்புகள், இறுதி நிலை உறுப்பு செயலிழப்பு நோயாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. அக்டோபர் 2008 முதல் தற்போது வரை 1,559 மொத்த உறுப்பு கொடையாளர்கள் மூலம் 5,687 உறுப்புகளும் 3,629 திசுக்களும் தானமாக பெறப்பட்டது.
இந்த அரசு பெறுப்பேற்றது முதல் தற்போது வரை 148 உறுப்பு கொடையாளர்களிடம் இருந்து 606 முக்கிய உறுப்புகளும் 307 திசுக்களும் தானமாக பெறப்பட்டுள்ளது. அதில் 99 இதயம், 113 நுரையீரல், 135 ஈரல், 255 சிறுநீரகம், 2 கணையம் மற்றும் 2 கைகள் கொடையாக பெறப்பட்டுள்ளது.
கரோனா பேரிடர் காலத்தில் உறுப்பு கொடையாளர்களின் எண்ணிக்கை குறைந்தபோது, அதனை ஊக்கப்படுத்தும் விதமாக அனைத்து மருத்துவக்கல்லூரி முதல்வர்களுடனான கலந்துரையாடல் கூட்டம் 28.3.2022 அன்று நடைபெற்றது. அதற்கு பிறகு கொடையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது.
2022 ஏப்ரல் 22 முதல் தற்போது வரை 29 உறுப்பு கொடையாளர்களிடம் இருந்து 49 உறுப்புகளும் 38 திசுக்களும் தானமாக பெறப்பட்டுள்ளது. முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 590 பயனாளிகள் ரூ.86.35 கோடி செலவில் பயனடைந்துள்ளனர்.
இதுவரை 6,386 சிறுநீரகம், 344 ஈரல், 37 இதயம், 51 நுரையீரல், தலா 18 இதயம் மற்றும் நுரையீரல், 2 கணையம் மற்றும் 23 கைகள் உறுப்பு மாற்று சிகிச்சைக்காக பதிவு செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் உள்ளது. உறுப்பு தானம் மற்றும் உடலுறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை அளிப்பதிலும், உறுப்பு தான விழிப்புணர்விலும் மற்றும் தானம் பெற்ற உறுப்புகளை பயன்படுத்துவதிலும் தமிழ்நாடு முன்னிலை மாநிலமாக உள்ளது” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: இன்ஃப்ளுயன்ஸா பதற்றம் வேண்டாம்..வழக்கம்போல பள்ளிகள் இயங்கும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்