சென்னை: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் கீழ் “நம்மை காக்கும் 48” என்ற திட்டத்தின் இரண்டு லட்சமாவது பயனாளியைச் சந்திக்கும் நிகழ்ச்சி, சென்னை குரோம்பேட்டை ரேலா மருத்துவமனையில் நடைபெற்றது. இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலர் ககன் தீப் சிங் பேடி ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவமனையில் இன்னுயிர் காப்போம் 48 என்ற மகத்தான திட்டத்தை துவக்கி வைத்தார்.
இந்த திட்டத்தின்படி, தமிழ்நாட்டில் சாலை விபத்திற்குள்ளாகும் நபர்கள் யாராக இருந்தாலும், உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தால், அவர்களுக்கு 48 மணி நேரத்தில் தமிழக அரசின் சார்பில் ஒரு லட்சம் ரூபாய் அளிக்கப்படும். இத்திட்டமானது தமிழ்நாடு முழுவதும் 236 தனியார் மருத்துவமனைகள், 455 அரசு மருத்துவமனைகள் என 691 மருத்துவமனைகளில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
-
இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் - 48 திட்டத்தின் 2 லட்சமாவது பயனாளியை குரோம்பேட்டை ரேலா மருத்துவமனையில் சந்தித்து அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவரிடம் கேட்டறியப்பட்டு நலம் விசாரிக்கப்பட்டது. #Masubramanian #TNHealthminister #நம்மைக்காக்கும்48 #DMK4TN… pic.twitter.com/o1odsHCXMe
— Subramanian.Ma (@Subramanian_ma) November 28, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் - 48 திட்டத்தின் 2 லட்சமாவது பயனாளியை குரோம்பேட்டை ரேலா மருத்துவமனையில் சந்தித்து அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவரிடம் கேட்டறியப்பட்டு நலம் விசாரிக்கப்பட்டது. #Masubramanian #TNHealthminister #நம்மைக்காக்கும்48 #DMK4TN… pic.twitter.com/o1odsHCXMe
— Subramanian.Ma (@Subramanian_ma) November 28, 2023இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் - 48 திட்டத்தின் 2 லட்சமாவது பயனாளியை குரோம்பேட்டை ரேலா மருத்துவமனையில் சந்தித்து அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவரிடம் கேட்டறியப்பட்டு நலம் விசாரிக்கப்பட்டது. #Masubramanian #TNHealthminister #நம்மைக்காக்கும்48 #DMK4TN… pic.twitter.com/o1odsHCXMe
— Subramanian.Ma (@Subramanian_ma) November 28, 2023
தமிழ்நாட்டில் எங்கு விபத்து நேர்ந்தாலும் மனித நேயத்துடன் அவருடைய உயிரைக் காப்பாற்றும் மகத்தான திட்டமாக இத்திட்டம் உள்ளது. திட்டமானது துவங்கி இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில், முதல் பயனாளியை முதலமைச்சர் சந்தித்தார். அதன்பின், சவீதா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒரு லட்சமாவது பயனாளியை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் ஒன்றரை லட்சமாவது பயனாளியை பூந்தமல்லி பனிமலர் மருத்துவமனையில் பார்த்தோம். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னாள் வரை விபத்துக்குள்ளானவர்களை மீட்பது என்பது ஒரு கடினமான காரியமாக இருந்தது. காரணம், காவல் துறையினரின் விசாரணை, நீதிமன்றங்களின் நீண்ட நெடிய படிக்கட்டுகளை ஏறி இறங்க வேண்டி இருக்கும் என பல்வேறு சங்கடங்களாக இருந்தது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்த விபத்துக்குள்ளானவர்களை உடனடியாகக் கொண்டு வந்து மருத்துவமனையில் சேர்த்தால் அவர்களுடைய சேவையைப் பாராட்டி ஐந்தாயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என இந்த திட்டம் துவங்கப்பட்டது.
அதன் அடிப்படையில், இன்றைக்கு (நவ.28) 2 லட்சமாவது பயனாளி குரோம்பேட்டை ரேலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவர் மட்டுமல்ல, 2 லட்சத்துக்கும் அதிகமான பயனாளியும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று காலை நடந்த விபத்து, நேற்று நடந்த விபத்து என்று விபத்துக்களில் சிக்கிய ஏழு பேர் இங்கே தற்சமயம் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 2 லட்சமாவது பயனாளி யார் என்றால், ஒரு கல்லூரி மாணவர். இவர் இருசக்கர வாகன விபத்தில் சிக்கியதால், அவருக்கு இங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த மாணவரை நானும், நம்முடைய துறைச் செயலாளரும், மருத்துவமனைக்கு வந்து பார்த்து நலம் விசாரித்தோம். அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகளையும் கேட்டு தெரிந்து கொண்டோம். அந்த மாணவனின் பெயர் ஐசக்ராஜ் (21). சிங்கப்பெருமாள் கோயில் அருகே நேற்றைய முன்தினம் (நவ.27) மாலை நடந்த விபத்தில் சிக்கி எலும்பு முறிவு ஏற்பட்டு, அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதோடு மட்டுமல்லாமல், இன்னொரு மாணவரும், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் எம்டெக் படித்து வருகிறார். அவருக்கும் இந்த மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் தொடங்கி, இதுவரை 2 லட்சம் பயனாளிகளைக் கடந்துள்ளது தமிழக அரசு இதுவரை உதவித்தொகையாக ரூபாய் ஒரு கோடியே 77 லட்சம் செலவில், 2 லட்சம் உயிர்கள் பாதுகாக்கப்பட்டு இருக்கிறது. இந்த “இன்னுயிர் காப்போம், நம்மை காக்கும் 48” திட்டம் மட்டுமல்லாமல் உடல் உறுப்பு தானங்கள், உடலுக்கு மாற்று அறுவை சிகிச்சை போன்ற பல்வேறு சிகிச்சைகளிலும் தமிழ்நாடு முதலிடத்தில் இருந்து வருகிறது.
தமிழ்நாட்டில் செயல்படுகின்ற முதலமைச்சர் காப்பீட்டு திட்டம் தமிழ்நாடு அளவில் மட்டுமல்லாமல், இந்திய அளவிலுமான மிகப்பெரிய திட்டம். இந்தியா முழுவதும் இந்த திட்டத்தை செயல்படுத்த பிரதமர் திட்டமிட்டுள்ளார். தமிழ்நாட்டின் முதலமைச்சராக கருணாநிதி இருந்த பொழுது, கடந்த 2009ஆம் ஆண்டு இந்த திட்டம் துவங்கப்பட்டது.
கடந்த 2009ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் தேதி துவங்கப்பட்ட இந்த திட்டத்தை பொறுத்தவரை, இதுவரை ஒரு கோடியே 45 லட்சம் குடும்பங்கள் இந்த காப்பீடு திட்டத்திற்கான பலனைப் பெற்று இருக்கிறார்கள். இதன் மூலம், ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ. 5 லட்சம் வரை சிகிச்சை பெற முடியும்.
தமிழக அரசைப் பொறுத்தவரை ஒவ்வொரு ஆண்டும் இதற்காக யுனைடெட் இந்தியா கார்ப்ரேட் நிறுவனத்திற்கு ரூ.546 கோடி ரூபாயை ஆண்டுக்கு செலுத்தி வருகிறது. 5 ஆண்டுகளுக்கு இந்த திட்டத்தின்படி ரூ.730 கோடி செலவு என்கின்ற வகையில், இந்த திட்டம் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
இந்த திட்டத்தைப் பொறுத்தவரை, 1,829 மருத்துவமனைகளில் இந்த காப்பீடு திட்டம் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. 854 அரசு மருத்துவமனைகள், 975 தனியார் மருத்துவமனைகளில் இந்த திட்டம் வெகு சிறப்பாக பயன்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில், இந்த 15 திட்டம் இன்னமும் கூடுதலாக, புதிய பிரிமியங்களாக உருவாகிக் கொண்டிருக்கிறது. புதிதாக திருமணமானவர்கள் குடும்பத் தலைவர்களாக ஆகின்ற நிலையில், புதிய குடும்பங்கள் உருவாகிக் கொண்டிருக்கிறது.
எனவே, தமிழ்நாட்டில் ஒரு கோடிக்கும் மேல் குடும்பங்கள் பயன்பாட்டில் இருந்தாலும், குடும்பங்கள் பயன்பட வேண்டும் என்கிற வகையில், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டையொட்டி, 100 இடங்களில் இந்த சிறப்பு காப்பீட்டு திட்டங்களுக்கான முகாம்கள் நடத்தப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், இந்த முகாம்கள் வருகிற டிசம்பர் 2ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, தமிழ்நாடு முழுவதும் 100 சட்டமன்றத் தொகுதிகளில் 100 இடங்களில் நடத்தப்பட இருக்கிறது. 100 இடங்களில் நடத்தப்பட இருக்கிற இந்த மருத்துவ முகாம்களை, மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். யாருக்கெல்லாம் முதலமைச்சர் காப்பீடு திட்டம் இல்லையோ, அவர்கள் இந்த முகாம்களில் கலந்து கொண்டு புதிதாக சேர்ந்து கொள்ள வேண்டும்” என்றார்.
இதனையடுத்து, டெங்கு பரவல் குறித்து எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தது தொடர்பாக கேட்ட கேள்விக்கு, “நாட்டு நடப்பு தெரியாத ஒருவர் எதிர்கட்சித் தலைவராக இருக்கிறார். டெங்கு ஒழிப்பதற்கு என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது என்பதை தமிழ்நாட்டில் உள்ள குழந்தையைக் கேட்டால் கூட தெரியும்.
இதுவரை பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. டிசம்பர் 30 வரை 5 வாரங்களிலும் முகாம்கள் நடத்தப்பட இருக்கிறது. இதுவரை மருத்துவத்துறை வரலாற்றிலேயே பத்து வாரங்களில் தொடர்ச்சியாக மழைக்காக சிறப்பு மருத்துவ முகாம்கள் டெங்கு, சிக்கன் குனியா, டைபாய்டு, மலேரியா போன்ற நோய்களுக்காக முகாம் நடத்தப்படுகிறது என்பது இந்திய வரலாற்றில் இதுதான் முதல் முறை. 5 வாரங்கள் தொடர்ச்சியாக நடத்த இருக்கிறோம். மேலும் 5 வாரங்கள் நடத்த திட்டமிட்டுள்ளோம்.
அந்த வகையில், பெரிய அளவில் மக்கள் முகாம்களை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இதுவரை தமிழ்நாட்டில் டெங்குவால் பாதிக்கப்பட்டவர்கள் 7,150 பேர். ஒவ்வொரு வருடமும் வடகிழக்கு பருவமழை, தென்மேற்கு பருவமழை வருகின்றபோது மட்டுமல்லாமல் வெப்பமழை, கோடை வெப்பமழை, வெப்பச் சலன மழை என்று மழை வரும் போதெல்லாம் மழைநீரில் கொசுக்கள் உருவாகி, அந்த கொசுக்களின் மூலம்தான் டெங்கு பரவுகிறது.
ஒவ்வொரு வருடமும் 10 ஆயிரம் நோயாளிகள் வருவது வழக்கம். டெங்கு கண்டறியப்பட்ட நாள் முதல், அதிகமான பாதிப்புகள் கடந்த 2012ஆம் ஆண்டுதான். அந்த ஆண்டுக்கான உயிர் இழப்பு 66. கடந்த 2017ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது, டெங்கு பாதிப்பு 23 ஆயிரத்துக்கும் மேல் இருந்தது.
அப்போது உயிர் இழப்பு 65. அதற்கான ஆதாரங்கள் உள்ளது. எடப்பாடி பழனிசாமி பார்த்துக் கொள்ள வேண்டும். இப்போது பாதிப்பு ஒவ்வொரு நாளும் 20இல் இருந்து 50க்குள் உள்ளது. ஒவ்வொரு வருடமும் 10-லிருந்து 20 பேருக்கு டெங்கு பாதிப்பால் இறப்பார்கள். ஆனால், அதிகபட்சமான உயிரிழப்பு 2012, 2017 இந்த இரண்டுமே அதிமுக ஆட்சி காலம்தான். இதன் பிறகு டெங்கு பற்றிய முழு உண்மைகளைத் தெரிந்து கொண்டு எடப்பாடி பேச வேண்டும்” என பதில் அளித்தார்.
தொடர்ந்து, தெரு நாய்கள் குறித்து கேட்டபோது, “தெரு நாய்களைப் பிடிப்பது, இரண்டாவது தடவையாக தடுப்பூசி போடுவது பெருநகர மாநகராட்சி செய்து கொண்டிருக்கிறது. ராயபுரத்தில் ஒரு தெரு நாய் கடித்து 27 நபர்கள் பாதிக்கப்பட்டார்கள். அக்கம் பக்கத்தில் இருக்கும் மக்கள் உடனடியாக மாநகராட்சிக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்க வேண்டும். அப்படி தெரிவித்தால், உடனடியாக பிடித்துக் கொண்டு சென்று விடுவார்கள். அதை பொதுமக்கள் தெரிவிக்காமல் விட்டதால்தான் இப்படி நடந்துள்ளது.
பொதுமக்கள் அந்த நாயை அடித்துக் கொன்று விட்டார்கள். வியாசர்பாடி என்.கே.பி நகரில் ஒரு நாய் தொடர்ந்து தொல்லை தருவதாக தகவல் வந்தது. உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஒட்டுமொத்த தெரு நாய்களையும் பிடித்து, தடுப்பூசி போடும் பணியினை மேற்கொண்டு வருகிறார்கள். நேற்று வரை 2,000-க்கும் மேற்பட்ட நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது” என்றார்.
மேலும், அரசு மருத்துவமனையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் உயிரிழந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, “அவர்களுக்கு ஏற்கனவே சுவாசக்கோளாறு, இருதயக்கோளாறு இருந்தது. கடந்த 25ஆம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர் உடலில் மிகப்பெரிய பாதிப்புகள் இருந்துள்ளது. இந்த நிலையில், 5 நபர்கள் வெண்டிலேட்டரில் இருந்து உள்ளார்கள். ஐந்து நிமிடம் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. வெண்டிலேட்டரைப் பொறுத்தவரையில், பேட்டரி பேக்கப் இருக்கும். ஒரு மணி நேரம் வரை அது ஒத்துழைக்கும். மின்சாரம் துண்டிக்கப்பட்டு 5 நிமிடங்கள்தான் ஆனது. ஐந்து பேரில் நான்கு பேர் நன்றாகத்தான் இருக்கிறார்கள்.
ஒருவருக்கு அதிகப்படியான பாதிப்பு இருந்ததால் இறந்துள்ளார். இதுகூட தெரியாமல் ஒரு தலைவர் அறிக்கை விடுவது, மருத்துவம் குறித்து எந்த மாதிரியான அறிவு உள்ளது என்பதை தெளிவுபடுத்துகிறது. புதிதாக துவங்கப்பட்டுள்ள மருத்துவமனையில் எந்த மருத்துவர்கள் தட்டுப்பாடும் இல்லை. அனைத்து மருத்துவர்களும் உள்ளனர்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: "6 மாதத்துக்கு ஒருமுறை ட்ரோன் கொண்டு கல்குவாரிகளை அளவிட்டு தமிழக அரசு சான்று" - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை!