சென்னை: கேரளாவில் இருந்து ரயில் மூலம் தமிழ்நாடு வரும் பயணிகளிடம் கரோனா தொற்று இல்லை என்பதற்கான சான்றிதழ் உள்ளதா என்பதையும், பயணிகள் இரண்டு டோஸ் தடுப்பூசிகள் போட்டு உள்ளனரா என்பதையும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அவர்,” தமிழ்நாட்டில் பல்வேறு நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்ரன. அண்டை மாநிலமான கேரளாவில் தினந்தோறும் எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்த நிலையில் இருக்கிறது. அந்த மாநிலம் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
ஆர்டிபிசிஆர் பரிசோதனை விவரம்
கேரளாவிலிருந்து வரும் பயணிகளை ஆர்டிபிசிஆர் பரிசோதனை மூலம் அனுமதிப்பது என முடிவெடுத்து தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. ரயில் மூலம் வரும் பயணிகளை சென்னை மாநகராட்சி பரிசோதித்து ஐந்தாம் தேதி முதல் நான்கு நாள்களில் 277பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்துள்ளனர்.
ஒவ்வொரு ரயிலிலும் 200க்கும் மேற்பட்ட பயணிகள் வந்தாலும், அவர்களிடம் இரண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டு அதற்கான ஆதாரம், 72 மணி நேரத்திற்குள் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்து நோய்தொற்று இல்லை என்பதற்கான ஆதாரம் இருந்தால் அனுமதிக்கப்படுகின்றனர். நோய் அறிகுறிகள் தென்படுபவர்கள் பரிசோதனை செய்யப்படுகின்றனர்.
தமிழ்நாட்டில் 11 புதிய மருத்துவ கல்லூரிகளை பொறுத்தவரையில், முதலமைச்சர் கடந்த மாதம் 14ஆம் தேதி டெல்லிக்கு சென்ற பொழுது ஒன்றிய அரசின் பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்தார்.
இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டுமென வேண்டுகோள் விடுக்கப்பட்டது. முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி அண்மையில் டெல்லிக்கு சென்று இருந்த நானும் துறை அலுவலர்களும் ஒன்றிய அரசின் அமைச்சரிடம் விரைந்து ஆய்வுக்கு வர வேண்டுமென வேண்டுகோள் விடுத்தோம்.
நாமக்கல், கிருஷ்ணகிரி, திருப்பூர், திண்டுக்கல் ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் ஒன்றிய அரசு அலுவலர்கள் ஆய்வினை மேற்கொண்டுள்ளனர். அதனடிப்படையில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான அனுமதி வழங்கியுள்ளனர்.
ஒவ்வொரு கல்லூரியிலும் 150 மாணவர்கள் என்ற வகையில் 4 மருத்துவக் கல்லூரியில் கூடுதலாக 600 மாணவர்கள் சேர்ப்பதற்கான வாய்ப்புள்ளது.
மீதமுள்ள ஏழு மருத்துவ கல்லூரிகளுக்கும் ஆய்வுகள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்ற வேண்டுகோளை ஒன்றிய அரசின் துறை அலுவலர்கள், அமைச்சருக்கு விடுத்துள்ளோம். 11 மருத்துவக்கல்லூரிகளுக்கு ஏற்கனவே திட்ட மதிப்பீடுகள் போடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. பணிகள் காலதாமதம் ஆனதால் திருத்தப்பட்ட திட்ட மதிப்பீடுகள் வேண்டுமென கேட்டுள்ளனர்.
மேலும் கூடுதல் வசதிகளும் வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இதற்கான அனுமதியை முதலமைச்சர் தந்து அதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நான்கு மருத்துவக் கல்லூரிகளில் ஆய்வினை முடித்து சென்றுள்ளனர். விரைவில் அனுமதி கிடைக்கும் என கருதுகிறோம்.அனுமதி கிடைத்தவுடன் நடப்பாண்டில் நான்கு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் மற்ற 7 மருத்துவ கல்லூரியில் ஒன்றிய அரசின் அலுவலர்கள் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டு அனுமதி வழங்க வேண்டும்.