சென்னை: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்கள் சந்திப்பில், ”தமிழ்நாட்டில் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற வேண்டும் என்பதற்காக தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். இதற்காக தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் மூலம் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர், கல்வி அமைச்சகம், சுகாதாரத்துறை அமைச்சகத்திற்கு விளக்கம் கேட்டு கடிதம் எழுதி இருந்தார். இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம், ஆயுஷ் அமைச்சகம் மூலமாக தமிழ்நாடு அரசுக்கு விளக்க கடிதம் வந்துள்ளது. ஏற்கனவே விளக்கம் கேட்டு மத்திய அரசு கடிதம் அனுப்பியிருந்தது. அதற்கு விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் மறு விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
ஒன்றிய அரசு ஏற்கனவே 7 கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. அதற்கான விளக்கம் அனுப்பப்பட்டிருந்த நிலையில், அதன் மீதான விளக்கம் மீண்டும் கேட்கப்பட்டுள்ளது. இது குறித்து ஓரிரு வாரத்தில் சட்ட வல்லுநர்களின் ஆலோசனைப் படி விளக்கம் மீண்டும் அனுப்பப்பட உள்ளது. கடந்த ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதா நிராகரிக்கப்பட்டது. அது போன்று நிராகரிக்காமல் தொடர்ந்து சந்தேகங்களைக் கேட்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக்கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரப்பப்படாமல் கடந்தாண்டு 12 இடங்களும், நடப்பாண்டில் 6 இடங்களும் இருக்கின்றன. இந்த இடங்களை மாநில அரசே நிரப்பிக் கொள்வதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என ஒன்றிய அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். இருந்தாலும் அவர்களின் உரிமையை உடனடியாக விட்டுக்கொடுக்கமாட்டார்கள்.
அகில இந்திய ஒதுக்கீட்டில் காலியாகும் மருத்துவ இடங்களை மாநில அரசுக்கு ஒதுக்கித் தர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவப்படிப்பிற்கான இடங்கள் கிடைப்பது சிரமமாக இருக்கிறது. மருத்துவப் படிப்புகளுக்கான 14 பாடப் புத்தகங்களுக்கு தமிழில் மொழி பெயர்ப்பு பணி நடைபெற்று வருகிறது, அதில் 5 புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. மற்ற புத்தகங்கள் விரைவில் வெளியிடப்படும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பாஜக ஆதரவோடுதான் ஈபிஎஸ் முதலமைச்சரானார்: பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன்