சென்னை: கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது பல்வேறு முறைகேடுகள் மற்றும் ஊழல்கள் நடைபெற்றதாக, உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.
பல்வேறு ஊழல் குற்றச்சாட்டு
வாகனங்களுக்கான ஜிபிஎஸ் கருவிகள் விற்க 118 நிறுவனங்கள் இருக்கும்போது, 8 நிறுவனங்களிடம் மட்டும் அவற்றை வாங்குமாறு போக்குவரத்துத் துறை பிறப்பித்த உத்தரவுக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்தது. ஜிபிஎஸ் கருவிகள் வாங்க போடப்பட்ட உத்தரவுக்கும் தடை விதிக்கப்பட்டது.
இது தொடர்பாக, அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக, கடும் குற்றச்சாட்டுகளை எழுப்பி வந்தது. இந்தக் குற்றச்சாட்டுகளை எம்.ஆர்.விஜயபாஸ்கர் மறுத்து வந்தார்.
திமுக ஆட்சிக்கு வந்தால் அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
21 இடங்களில் சோதனை
இந்நிலையில், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமாக கரூரில் உள்ள வீடு, நிறுவனங்கள், உறவினருக்கு சொந்தமான வீடுகள் உள்ளிட்ட 21 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது வழக்கு
சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது சொத்துக்குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
சோதனை வழக்கமான ஒன்று
இதுகுறித்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் வழக்கறிஞர் செல்வம் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தி வருவது வழக்கமான ஒன்று தான் என தெரிவித்தார். எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது சொத்து குவிப்பு வழக்கு பதிவு செய்திருப்பது வழக்கமான நடைமுறை தான் என்றும் அவர் கூறினார்.
எம்.ஆர்.விஜயபாஸ்கர் முழு ஒத்துழைப்பு
வரிமான வரி சோதனைக்கு எம்.ஆர்.விஜயபாஸ்கர் முழு ஒத்துழைப்பு அளித்து வருவதாகவும், இந்த சோதனை நடைபெறுவதற்கான காரணம் அனைவருக்கும் தெரியும் என்றும் அவர் கூறினார். இதில் ஆவணங்கள் ஏதும் சிக்கவில்லை எனவும் வழக்கறிஞர் செல்வம் தெரிவித்தார்.
இதையும் படிங்க: எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை