சென்னை: பிரதமர் நரேந்திர மோடியின் 71ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, பாஜக மீனவரணி சார்பில் தண்டையார்பேட்டையில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
இதில் ஒன்றிய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் எல். முருகன் கலந்துகொண்டு, பொதுமக்களுக்கு 710 கிலோ மீன்களை இலவசமாக வழங்கினார்.
மீனவர்களைப் பாதிக்காமல் மசோதா நிறைவேற்றம்
பின்னர் சென்னை திருவொற்றியூர் குப்பம் பகுதியில் ஒன்றிய அரசின் மீன்வளம் மற்றும் மீன்வளர்ப்பு கட்டுமான மேம்பாட்டு நிதியின் மூலமாக, ரூ.200 கோடி செலவில் கட்டப்பட்டுவரும் சூரை மீன்பிடி துறைமுகத்தை அவர் ஆய்வுசெய்தார்.
தொடர்ந்து காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் நடைபெற்ற மீனவர்களின் கருத்துக் கேட்பு கூட்டத்தில் கலந்துகொண்ட எல். முருகன், மீனவர்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்து தேவையான ஆலோசனைகளை வழங்கினார்.
கூட்டத்திற்குப் பின்னர் அவர் செய்தியாளரிடம் பேசுகையில், “தற்போது கொண்டுவரப்படவுள்ள மீன்வள மசோதா குறித்து அனைத்து மாநில மீனவ மக்கள், மீனவ சங்கத்தினர் ஆகியோருடன் ஆலோசனை மேற்கொள்ளும் நிலையிலேயே உள்ளது. எந்த வகையிலும் மீனவர்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையிலேயே மீன்வள மசோதா நிறைவேற்றப்படும்.
மீனவர்கள் பாதுகாப்புக்காகவே சட்டம்
ஆழ்கடலில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில், மீனவர்களின் பாதுகாப்புக்காகவே இந்தச் சட்டம் கொண்டுவரப்படுகிறது. மீனவ கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் பயன்பெறும் வகையில் கடல்பாசி அமைக்கும் திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் பலருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும். மேலும் நலிவடைந்த மீனவ கிராமத்தை தத்தெடுத்து, அங்கு பள்ளிக்கூடம், மருத்துவமனை போன்றவற்றை அமைத்து கிராமத்தை மேம்படுத்தும் திட்டமும் கொண்டுவரப்படவுள்ளது” என்றார்.
இதையும் படிங்க: ஒவ்வொருவருக்கும் 1 கிலோ மீன்கள் இலவசம் - மோடி பிறந்த நாள் ஸ்பெஷல்!