சென்னை: மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சென்னை கோடம்பாக்கத்தில் புதிதாக கட்டப்பட்ட அரங்கினை நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்.
இங்கு ரூ.1.05 கோடி செலவில் அரங்கம், மைதானத்தை புதுப்பித்தல், சுற்றி வேலி அமைத்தல், பார்வையாளர்கள் அமர்வதற்கான மேடை உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன.
ஓ.எஸ்.ஆர் நிலம்
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், "சென்னை மாநகராட்சியில் ஓ.எஸ்.ஆர் நிலம் இருந்தால் அதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை மாநகராட்சி முடிவு செய்யும். சென்னை மாநகராட்சியின் பல்வேறு இடங்களில் நிர்வாகம் அனுமதி இல்லாமல் ஓ.எஸ்.ஆர் விற்க முற்படுகின்றனர். 420 மைதானங்கள் சென்னையில் உள்ளது. அதை மேம்படுத்தவும், நடப்பாதையை அகல படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.
விதி மீறல்கள் மீறி ஏரிகளில் குப்பை கொட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சென்னைக்குள் 500 ஏரிகள் உள்ளன. அதில் 200 ஏரிகளில் இந்த ஆண்டு ரூ.300 கோடி செலவில் சீரமைக்கப்படும். தாம்பரம் அருகில் பல்வேறு நீர் பாசன ஏரிகள் சுத்தம் செய்யப்படாமல் இருக்கிறது. அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அம்மா உணவகத்திற்கு நிதி ஒதுக்கவில்லை
ஏரிகளில் குப்பை கொட்டியதற்கு ரூ.50 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருக்கும் ஆற்றின் இருபுறமும் சுவர் அமைக்கப்படும். வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரை ஆற்றில் கலக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அதிமுக ஆட்சியில் அம்மா உணவகத்திற்கு நிதி ஒதுக்கவில்லை. மாநகராட்சி, நகராட்சி பொது நிதியிலிருந்து தான் அம்மா உணவகம் செயல்பட்டு வந்தது. அதிமுக ஆட்சி முடியும் தருணத்தில் ரூ.100 கோடி நிதி அம்மா உணவகத்திற்கு ஒதுக்கி அரசாணை வெளியிட்டார்கள்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: விவசாயக்கடன் 5% உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் - பேரவையில் அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்