சென்னை: தமிழ்நாட்டில் பெய்த கனமழையால் மயிலாடுதுறை, கடலூர் உள்ளிட்ட 24 மாவட்டங்களில், சுமார் 45,826 ஹெக்டேர் நெற்பயிர் நீரில் மூழ்கியுள்ளன எனவும், 12ஆம் தேதி மட்டும் 2 மனிதர்களும் 83 கால்நடை இறப்புகளும் பதிவாகி உள்ளதாகவும், 538 குடிசைகள் மற்றும் வீடுகள் சேதமடைந்துள்ளன எனவும்;
மேலும், கால்நடை இறப்பு மற்றும் சேதமடைந்த வீடுகள், குடிசைகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
2 உயிரிழப்புகள்-4 லட்சம் நிவாரணம்: இதுகுறித்து அவர் இன்று (நவ.13) வெளியிட்ட அறிக்கையில், 'தமிழ்நாட்டில் பரவலாக கனமழை பெய்ததை அடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில் அரசு உயர் அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டு முன்னெச்சரிக்கை, மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை துரிதப்படுத்த அறிவுரைகள் வழங்கினார்.
மேலும், நேற்று சேலம் மாவட்டத்தில் 1 மனித உயிரிழப்பும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 1 மனித உயிரிழப்பும் ஆக மொத்தம் 2 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. இறந்த நபர்களது குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், தமிழ்நாட்டில் நேற்று பெய்த கனமழையின் காரணமாக, 83 கால்நடைகளின் இறப்பு பதிவாகியுள்ளது. 538 குடிசைகள் மற்றும் வீடுகள் சேதமடைந்துள்ளன. கால்நடை இறப்பு மற்றும் சேதமடைந்த வீடுகள், குடிசைகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தேடல், மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளுக்காக நீலகிரி, திண்டுக்கல் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களுக்குத் தலா 1 குழு வீதம் தேசியப் பேரிடர் மீட்புப்படையின் 70 வீரர்களைக்கொண்ட 3 குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மேலும் கடலூர், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை மாவட்டங்களில் 163 வீரர்களைக்கொண்ட தமிழ்நாடு பேரிடர் மீட்புப்படையின் 5 குழுக்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.
நீரில் மூழ்கிய பயிர்கள்: மயிலாடுதுறை, கடலூர் உள்ளிட்ட 24 மாவட்டங்களில் சுமார் 45,826 ஹெக்டேர் நெற்பயிர் நீரில் மூழ்கியுள்ளன. இதனை விரைவில் வடியவைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சீரமைப்புப்பணிகள் மயிலாடுதுறை மாவட்டத்தில், தற்போது மழை நீர் விரைந்து வடிந்து வருகிறது. கனமழையின் காரணமாக ஏற்பட்ட சேதங்களை சீரமைக்க அனைத்துத்துறை அலுவலர்களும் கள அளவில் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: சிதம்பரம் அருகில் வீடுகளை சூழ்ந்த மழைநீர்; பொதுமக்கள் அவதி