சென்னை: சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது. ஜூன் ஒன்றாம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. 27 ஆண்டிற்குப் பிறகு ஜூன் மாதம் அதிகளவு மழை பெய்துள்ளதாகவும், வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாகவும் திடீரென சென்னையில் மழை பெய்துள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
சென்னையில் தொடர் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், நகரின் முக்கிய பகுதிகளில் தண்ணீர் தேங்கியும், மரங்கள் முறிந்து விழுவதையும் பார்க்க முடிகிறது. சென்னையில் திடீரென பெய்த கனமழை குறித்து சென்னை சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் உள்ள மாநில அவசரக்கால செயல்பாட்டு மையத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், “வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்து வருகிறது. முதல்வர் தற்போதைய நிலவரங்களைக் கேட்டு வருகிறார். மழையின் காரணமாக 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. சென்னையில் உள்ள 22 சுரங்கப் பாதையில் கணேசபுரம் சுரங்கப்பாதையில் மட்டும் தண்ணீர் தேங்கி உள்ளது.
சென்னையில் பல பகுதிகளில் தேங்கி இருக்கும் தண்ணீரை அகற்றும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது வரை எந்தவிதமான மனித உயிரிழப்போ, கால்நடைகள் உயிரிழப்போ ஏற்படவில்லை. 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட களப்பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர்.
83 இடங்களில் மழை நீர் தேங்கிய நிலையில் 28 இடங்களில் முழுமையாக அகற்றப்பட்டது. 6 மரங்களும் 38 கிளைகளும் விழுந்துள்ள நிலையில் அவற்றை அகற்றும் பணியைத் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. எதிர் வரும் பருவ மழையை எதிர்கொள்ளத் தயார் நிலையில் உள்ளோம். அதற்காக அனைத்து வித முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மழைநீர் வடிகால்வாய் பணி 80% முடிந்ததன் காரணமாக தான் மழைநீர் பெருமளவு தேங்கவில்லை. மெட்ரோ பணி நடைப்பெறும் இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. அவற்றையும் அகற்றும் பணியில் களப்பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். 260 பம்புகள் தயார்நிலையில் உள்ள நிலையில் 25 பம்புகள் பயன்பாட்டில் உள்ளது.
அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதற்கு ஏற்ப அனைத்து விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது” என கூறினார்.
இதையும் படிங்க: TN Rain Update: தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!