தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் காமராஜ், அரசு மீது எதிகர்கட்சித் தலைவர் ஸ்டாலின் வைத்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்தார். அப்போது பேசிய அவர், ”ஊரடங்கு உத்தரவு காலத்தில் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருள்கள் அனைத்தும் முழுமையாக வழங்கப்பட்டுள்ளது. மக்கள் பாதிக்காத வகையில் ஊரடங்கு காலம் முழுவதும் உணவு பொருள் வழங்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் நியாய விலை கடைகளில் அத்தியாவசிய பொருள்கள் விலையின்றி வழங்கப்படுகிறது. 65 நாள்களாக மக்களின் அத்தியாவசிய உணவு தேவைகளை அரசு அனைத்து வகையிலும் பூர்த்தி செய்துள்ளது.
மார்ச் 23 ஊரடங்கு அறிவிக்கப்பட்டது, அன்றே 1000 ரூபாய் ரொக்கம், ஏப்ரல் மாதத்திற்கு தேவையான இலவச ரேஷன் பொருள்கள் அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டது. அதிவ் 99% பேருக்கு நிவாரணத் தொகையும், 98% பேருக்கு உணவு பொருள்களும் விநியோகிக்கப்பட்டுவிட்டது. தடைசெய்யப்பட்ட 845 பகுதிகளில் உள்ள குடும்பங்களுக்கு நேரடியாக ரேஷன் பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டது. 2 லட்சத்து 93 ஆயிரம் குடும்பங்களுக்கு ரேஷன் பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன.
புதிதாக குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்திருந்த 71 ஆயிரத்து 61 பேருக்கும் இலவச பொருள்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. சமூக சமையல் கூடங்கள் மூலம் மக்களுக்கு உணவு வழங்கப்படுகிறது. அமைப்பு சாரா தொழிலாளர்கள், திருநங்கைகள், முடி திருத்தும் தொழில் செய்வோர் ஆகியோருக்கு நிவாரணத் தொகையும், இலவச பொருள்களும் வழங்கப்பட்டுள்ளன. எனவே, தமிழ்நாட்டில் உணவு பிரச்னையே இல்லாத ஒரு நிலையை அரசு உருவாக்கி உள்ளது.
இதை பொறுத்துக் கொள்ள முடியாமல், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் ஏப்ரல் 20 முதல் 'ஒன்றிணைவோம் வா' என்கிற திட்டத்தை தொடங்கியள்ளதாகவும் அதன் மூலமே அரசை செயல்பட வைப்பதாகவும் அரசியல் நாடகம் ஒன்றை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை முதலமைச்சரின் உறுதியான நடவடிக்கைகளின் அடிப்படையில் உணவு பொருள் கிடைப்பத்தில் எந்த தட்டுப்பாடும் இல்லாமல் செயல்பட்டுகொண்டிருக்கிறோம்.
எந்த ஆதாரமும் இல்லாமல் வேண்டுமென்று அரசியல் நாடகத்திற்காக இது போன்ற குற்றசாட்டுகளை ஸ்டாலின் கூறி வருகிறார். தமிழ்நாடு அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் முறையாக செய்துவருகிறது. மேலும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழ்நாடு முதலமைச்சரும், அரசும் உறுதியாக செயல்பட்டு வருகிறோம். எனவே மக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை.
அரசின் செயல்களை ஸ்டாலின் பொருத்தமில்லாமல் குற்றஞ்சாட்டக்கூடாது. வேண்டுமெனில் திமுகவைச் சேர்ந்த டி.ஆர் பாலு தங்களுடன் வந்தால் கரோனா பணிகள் குறித்து நேரில் நிரூபிக்கத் தயார், உண்மைத்தன்மையின்றி திமுக அளித்த மனுக்கள் தொடர்பாக விசாரணை நடைபெற்றுவருகிறது” என்றார்.
இதையும் படிங்க: '2020-21ஆம் ஆண்டிற்கான புதிய வரவு செலவு திட்டம் தாக்கல் செய்ய வேண்டும்' - ஸ்டாலின்