கரோனா தொற்று அச்சம் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த படப்பிடிப்பை தொடங்க அனுமதி கோரி திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அமைச்சர் கடம்பூர் ராஜூவை தலைமைச் செயலகத்தில் சந்தித்தனர்.
இந்தச் சந்திப்பிற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த ஆர்.கே. செல்வமணி கூறுகையில், "திரைப்பட தொழிலாளர் சம்மேளம் சார்பில் 10 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் கரோனோ நிவாரண நிதியை தமிழ்நாடு அரசுக்கு அளித்துள்ளோம்.
சின்னத்திரை படப்பிடிப்புகள் தொடங்க அனுமதி கேட்கப்பட்டது. சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அரசு நிபந்தனைகளை விதித்தால் அதை பின்பற்ற தயாராக இருக்கிறோம். சின்னத்திரை படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டால் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உடனடியாக பயன் அடைவார்கள். மேலும் ஊரடங்கு காரணமாக 25 ஆயிரம் திரைப்பட தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர் சின்னத்திரை படப்பிடிப்பிற்கான அனுமதியை வழங்க வேண்டும்.
திரையரங்க திறப்பு, சினிமா படப்பிடிப்புகளுக்கும் அனுமதி உள்ளிட்ட கோரிக்கைகளும் அமைச்சரிடம் கடம்பூர் ராஜூவிடம் கூறியுள்ளோம். இதுகுறித்து முதலமைச்சரிடம் கலந்து பேசி விரைவில் நல்ல முடிவை அறிவிப்பதாக அமைச்சர் உறுதியளித்துள்ளார்" என்றார்.