சென்னை ராயபுரத்திலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் சமூக நலத்துறையால் ஏற்பாடு செய்யப்பட்ட தமிழ்நாடு அரசின் தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தின்கீழ் 270 பயனாளர்களுக்கு சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மீன்வளத் துறை அமைச்சர் ஜெயகுமார் வழங்கினார்.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கனவு திட்டமானா தாலிக்குத் தங்கம், திருமண நிதியுதவி போன்ற திட்டங்கள் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின்கீழ் இதுவரை 13 லட்சத்து 40 ஆயிரத்திற்கும் அதிகமான பயனாளர்கள் பயன் பெற்றுள்ளனர்.
ராயபுரத்தில் அதிமுகவிற்கு எதிராக யார் நின்றாலும் இறுதியில் மூச்சு பேச்சு இல்லாத நிலையே ஏற்படும். ராயபுரத்தில் திமுக நின்னாலும், காங்கிரஸ் நின்னாலும் யாரும் டெபாசிட் வாங்க முடியாது. ராயபுரம் மக்கள் இரட்டை இலைக்கும், அதிமுக சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளருக்கும் வாக்களிப்பார்கள்.
அதிமுக கூட்டணியில் எந்தவித சலசலப்போ, ஊசலோ இல்லை. கூட்டணி குறித்து விரைவில் அறிவிக்கப்படும். அதிமுகவில் கட்சி நிகழ்ச்சிக்கான பணத்தை கட்சியினராகிய நாங்கள் செலவு செய்கிறோம். ஆனால், திமுகவில் தற்போது நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் பிரசாந்த் கிஷோர் அளிக்கும் பில்லிற்கு பணம் கட்ட முடியாமல் திமுகவினர் திணறி வருகின்றனர்” எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி, மாநகர ஊழியர்கள், அதிமுகவினர், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: தற்காலிக ஆசிரியர்களை நிரந்தர பணியில் அமர்த்த முடியாது - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்