இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘கடந்த 24.10.2019 அன்று திருவனந்தபுரம் மண்டல வானிலை ஆராய்ச்சி மையம் சிறப்பு வானிலை அறிக்கையை வழங்கியது. அதன்படி, அரபிக்கடலில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது வலுப்பெற்று 'கியார்' என்ற தீவிர புயலாக மாறியுள்ளது என்றும் இது கிழக்கு மத்திய அரபிக்கடலில் நிலை கொண்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களுக்கு புயல்குறித்த எச்சரிக்கை மாவட்ட மின்வளத்துறை அலுவலர்கள், அனைத்து கடலோர மீனவ அமைப்புகள் மற்றும் மீனவ கூட்டமைப்பு சங்கங்கள் மூலமாக வானிலை தொடர்பான தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. மீன்துறை தலைமை அலுவலகம் மற்றும் குளச்சல் மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாடு அறையும் நிறுவப்பட்டுள்ளது.
மேற்கண்ட இந்த நடவடிக்கைகள் மூலம் அரபிக் கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த 770 படகுகளில் 763 படகுகள் பத்திரமாக அருகிலுள்ள துறைமுகங்களுக்கு வந்து சேர்ந்துள்ளன.
தற்போது 27.10.2019 வானிலை அறிக்கையில் தென்மேற்கு வங்கக் கடல், மன்னார் வளைகுடா, குமரிக்கடல், தென்தமிழக கடலோர பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்ட பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை மூலம் அந்தப்பகுதிகளில் மீன்பிடித்துக்கொண்டிருந்த 525 படகுகளில் 520 படகுகள் பத்திரமாக அருகிலுள்ள துறைமுகங்களுக்கு வந்து சேர்ந்துள்ளன.
புயல் எச்சரிக்கை வழங்கப்படுவதற்கு முன்பு கடலில் மீன்பிடிக்கச் சென்று கரை திரும்பாத கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 7 படகுகள் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 5 படகுகளின் இருப்பிடத்தைக் கண்டறிந்து தகவல் தெரிவிக்கவும் மீட்புப் பணிகளில் ஈடுபடவும் கடலோர காவல்படை மற்றும் அண்டை மாநில மீன்வளத்துறையின் வழியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
தற்போது ஏற்பட்டுள்ள புதிய புயல் சின்னத்தைத் தொடர்ந்து சிறப்புப் புயல் முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்வதற்காக மீன்துறை கூடுதல் இயக்குநர் தலைமையில் 35 துறை அலுவலர்களைக் கொண்ட 10 குழுக்கள் அமைக்கப்பட்டு கன்னியாகுமரி தூத்துக்குடி மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
இவர்கள் மாவட்ட நிர்வாகம் மற்றும் தொடர்புடைய பிற துறைகளுடன் ஒருங்கிணைந்து புயல் முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்வார்கள்’ என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அரபிக்கடலில் உருவான 'மகா' புயல்! - நாளை தீவிரமாகிறது