டெல்லியில் நடைபெறும் ஜி.எஸ்.டி கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அமைச்சர் ஜெயக்குமார் சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி சென்றார். அதற்கு முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், 'ஜி.எஸ்.டி. 38ஆவது கூட்டம் மத்திய நிதி அமைச்சர் தலைமையில் நடக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள வணிகர்கள், வர்த்தகர்கள், தொழில் நிறுவனங்கள், சேவையில் ஈடுபட்டு உள்ளவர்களின் கோரிக்கையை அறிந்து முதலமைச்சர் ஒப்புதலுடன் 38ஆவது ஜி.எஸ்.டி. கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளதால், பல்வேறு பொருட்களுக்கு வரி விலக்கு, வரி குறைப்பு அளிக்கப்பட்டது. எட்டு சேவைகளும், 68 பொருட்களுக்கும் வரி விலக்கு, வரி குறைப்பு செய்யப்பட்டது. தமிழ்நாட்டிற்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து 1,898 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டு உள்ளது. இன்னும் 1,338 கோடி ரூபாய் இரண்டு மாதங்களுக்கான நஷ்ட ஈடு விரைவில் வழங்கப்படும்' என்று கூறினார்.
அதேபோல் 2017-18ஆம் ஆண்டு ஜி.எஸ்.டி.க்கான 4,500 கோடி ரூபாய் மாநிலங்களுக்கு இடையான சரக்கு விற்பனை பணம் வர வேண்டி உள்ளது. இந்தத் தொகையை வழங்கக் கூட்டத்தில் வலியுறுத்தப்படும். ஜி.எஸ்.டி. தொடர்பாக எட்டு அமைச்சர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது' எனவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ' குடியுரிமை விவகாரம் தொடர்பாக திமுகவின் அனைத்துக் கட்சி கூட்டம் என்பது, சாத்தான் வேதம் ஓதுவது போன்றது என்றும், குடியுரிமை விவகாரம் குறித்து 2009ஆம் ஆண்டே மத்திய அரசுக்கு கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார். அப்போது மத்தியிலும், மாநிலத்திலும் திமுக கூட்டணி தான் ஆட்சியில் இருந்தது. அப்போதே இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை பெறாமல் இப்போது அவர்கள் நாடகம் போடுகின்றனர். இதனை மக்கள் நம்பமாட்டார்கள். அதுமட்டுமின்றி இலங்கைத் தமிழர்கள் குடியுரிமை விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுவதாகவும்' குற்றஞ்சாட்டினார்.
உள்ளாட்சித் தேர்தல் விவகாரத்தில் நீதிமன்றம் குட்டு வைத்து அனுப்பியும் ஸ்டாலின் திருந்தவில்லை என்றும், மீண்டும் மீண்டும் நீதிமன்றம் சென்று அவர்கள் அபராதம் போடும் வரை ஓயமாட்டேன் என்பது போல் ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார் என்று அமைச்சர் ஜெயக்குமார் பேசினார்.
இதையும் படிங்க: அமைச்சர் மீதான வழக்கு விசாரணைக்குத் தடை