தமிழ்நாடு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சென்னை ராயப்பேட்டை பகுதியில் அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "உடல்நலம் பேணும் சிறப்பான மாநிலமாக தமிழ்நாடு பல்வேறு விருதுகளை குவித்துள்ளது. சுகாதாரத்திற்கு தலைநகராக சென்னை விளங்குகிறது. எல்லா தொகுதிகளிலும் அம்மா மினி கிளினிக் தொடங்கப்பட்டுள்ளது. 200 வட்டங்களில் இன்னும் சில இடங்களில் தொடங்கப்பட உள்ளது.
நமது எம்ஜிஆர் பத்திரிகை பொறுத்தவரை ஜெயலலிதா இருக்கும்வரை அதிகாரப்பூர்வமான பத்திரிகை. இப்போது சசிகலா, டிடிவி தினகரன் அவரது குடும்பத்தினர் கட்டுப்பாட்டில் உள்ளது. தற்போது அது ஒரு குடும்ப பத்திரிகை, அதில் அவர்கள் என்ன வேண்டுமானலும் எழுதுவார்கள்.
ஆனால், அது உண்மை இல்லை. மேலும் சசிகலா வருகைக்காக 192 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது. இது மக்கள் செல்வாக்கு எதுவும் கிடையாது. செயற்கையாக உருவாக்கியுள்ளார்கள். 2021ஆம் ஆண்டை பொறுத்தவரை ஒரே நோக்கம், மீண்டும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சியை நிறுவுவது. சசிகலா அழைப்பு விடுவது திமுகவிற்குத்தான். துரைமுருகன் நீண்ட நாள்களாக பேசாமல் இப்போது நிர்பந்தம் காரணமாக பேசுகிறார்.
திமுகவின் மூத்த நிர்வாகிகள் உள்ளுக்குள் குமுறிக்கொண்டு இருக்கின்றனர். நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் உதயநிதிக்கு மரியாதை செய்ய வேண்டிய ஆதங்கத்தில் உள்ளனர். துரைமுருகன் 2021 தேர்தல்வரை கட்சி இருக்குமா என்று கேட்பது திமுகவைதான். திமுகவைவிட அதிக முறை ஆண்ட, ஆளப்போகும் கட்சி அதிமுக.
மேலும் திமுக கொள்ளையடிக்கும் அகோர பசியில் உள்ளது. இது அவர்களுக்கு கடைசி தேர்தல். தோற்ற பிறகு கட்சி மு.க.ஸ்டாலின் தலைமையில் இருக்காது என்றார்.
அதுமட்டுமின்றி, வன்னியர் உள் ஒதுக்கீடு தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், வன்னியர் உள் ஒதுக்கீடு தொடர்பாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி முடிவு செய்யப்படும் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சசிகலா வருவது என்பது, கடல் வற்றி கருவாடு சாப்பிட நினைத்த கொக்கு குடல் வற்றி செத்துப்போன கதைதான். இதேநிலைதான் டி.டி.வி. தினகரனுக்கும் என்றார்.
அவரிடம், மக்கள் நீதி மய்யத்தின் நிரந்தர தலைவராக கமல் ஹாசன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது தொடர்பாக பதிலளித்த அவர், கமல் காற்றில் கத்தி வீசிக்கொண்டு இருப்பவர் என்று பதிலளித்தார்.
இதையும் படிங்க: பள்ளிகள் திறக்க ஆய்வுகள் நடத்தப்படவில்லை- செங்கோட்டையன்